பதிவு செய்த நாள்
21
மார்
2015
12:03
திருச்சி: திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் நேற்று, பூச்சொரிதல் விழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்தனர். திருச்சி உறையூரில் பிரசித்திபெற்ற வெக்காளியம்மன் கோவில் உள்ளது. சோழ மன்னர்களின் குல தெய்வமாகவும், திருச்சி நகரின் காவல் தெய்வமாகவும் விளங்கி வரும் இந்த கோவிலில், அம்மனின் மூலஸ்தானத்திற்கு மேற்கூரை கிடையாது. காற்று, மழை, வெயில் உட்பட அனைத்து இடர்பாடுகளையும் தானே தாங்கிக் கொண்டு, மக்களை காத்து வருவதாக ஐதீகம். இந்த கோவிலில் ஆண்டு தோறும் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடக்கும். அதன்படி, இந்தாண்டு வெக்காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது. காலை 6 மணிக்கு கோயில் நிர்வாகம் சார்பில், முதல் பூக்கூடை மேளதாளத்துடன் யானைகள் புடை சூழ, வீதி உலாவாக எடுத்து வரப்பட்டது.கோயில் உதவி கமிஷனர் ஜெயப்பிரியா, அர்ச்சகர் மார்க்கண்டர் மற்றும் கோவில் பணியார்கள், அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்து, பூச்சொரிதலை துவக்கி வைத்தனர். தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் வந்து, தாங்கள் கொண்டு வந்த பூக்களால், அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.திருச்சியை சுற்றி பல்வேறு பகுதிகளில் இருந்து, 50க்கும் மேற்பட்ட அலங்கார வண்டிகளில் டன் கணக்கில் பூக்கள் கொண்டுவரப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் அம்மனை தரிசிக்க வசதியாக நேற்று விடிய, விடிய நடை திறந்திருந்தது.