பரமக்குடி : காட்டுப்பரமக்குடி கலியுகம் கண்ட விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு நான்காம் கால யாகபூஜை முடிந்து, வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க காலை 8 மணிக்கு மேல் கடம் புறப்பாடு நடந்தது. காலை 9 மணிக்கு விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின், விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர். ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனை தெற்குவாசல் ஸ்ரீ பால ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக சிறப்பு பூஜை மார்ச் 21 ல், துவங்கியது. நேற்று காலை யாக பூஜைகள் முடிந்து, வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க காலை 8 மணிக்கு மேல் கடங்கள் புறப்பாடு நடந்தது. அதனை தொடர்ந்து கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகிகள், பணியாளர்கள் செய்தனர்.