பதிவு செய்த நாள்
23
மார்
2015
01:03
சென்னை: ஸ்ரீராம்சேனா அமைப்பு சார்பில், இந்து ஒற்றுமை மாநில மாநாடு, சென்னை ராயபுரத்தில்நடந்தது. இதில், பங்கேற்ற, அகில இந்திய தலைவர் பிரமோத் முத்தாலிக் கூறியதாவது: நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும், பப்கள் இந்து கலாசாரத்திற்கு எதிரானது. அதனால் தான், கர்நாடகாவில், பப்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினோம். அதனால், அங்கு சட்டவிரோதமாக இயங்கிய, 132 பப்கள் மூடப்பட்டன. அங்கு, இப்போது எந்த, பப்பிலும் பெண்கள் குடிக்க அனுமதி இல்லை. பப்களுக்கு வரவே பெண்கள் அஞ்சுகின்றனர். அதேபோல, தமிழகத்தில் இயங்கும், பப்களையும் கண்டறிந்து மூட உள்ளோம். இதற்காக, பெண்கள் அமைப்பை, இங்கு பலப்படுத்த முடிவு செய்துள்ளோம். பெண்கள் அமைப்பினர் தரும் ஆலோசனைப்படி, பப்கள் செயல்படும் நட்சத்திர ஓட்டல்களுக்கு எச்சரிக்கை செய்வோம். அதை ஏற்று, அவர்கள், பப்களை மூடாவிட்டால், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து, இந்து தலைவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மிரட்டல் வந்த சர்வதேச தொலைபேசி எண்கள் குறித்த விவரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என, போலீசார் கூறுகின்றனர். இந்து இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்த, தமிழகத்தில் முதல் முறையாக மாநாடு நடத்தப்படுகிறது. பசுவதை மற்றும் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வருவதற்கு நாங்கள் தொடர்ந்து போராடுவோம். தமிழகத்தில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்ல, கோவா அரசு மக்களுக்கு உதவி வழங்குகிறது. அதேபோன்று காசி, ராமேஸ்வரம் யாத்திரைக்கு செல்லும் இந்துக்களுக்கு, அனைத்து மாநில அரசுகளும் உதவ வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.