கொல்லங்கோடு பத்திரகாளி கோயிலில் 1521 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2015 10:03
நாகர்கோவில்: கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் 1521 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்டது. கன்னியாகுமரி- கேரள எல்லையில் அமைந்துள்ளது கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயில். இங்கு பங்குனி மாதம் பத்து நாள் தூக்கத்திருவிழா நடைபெறுகிறது. பரணி நட்சத்திர நாளில் குழந்தைகளுக்கு தூக்க வழிபாடு நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து தூக்க நேர்ச்சைக்கான குழந்தைகள் பெயர் பதிவு நடைபெற்றது. பின்னர் குழந்தைகளை கையில் தாங்கிய படி தூக்க மரத்தில் தொங்கும் "தூக்கக்காரர்கள் தேர்வு நடைபெற்றது. இவர்கள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் தேர்வு செய்யப்பட்டனர். தூக்க நேர்த்தி கடன் நிகழ்ச்சி நேற்று காலை தொடங்கியது. 40 அடி உயர தூக்க வில்லில் நான்கு தூக்கக்காரர்கள் துணியால் கட்டப்பட்டு அவர்கள் கையில் குழந்தைகளை கொடுத்ததும், தூக்க வில் மேல்நோக்கி எழும்பும். இதை தொடர்ந்து தூக்க வண்டி கோயிலை வலம் வரும். பக்தர்கள் தேர் போல் இந்த வண்டியை இழுத்து வருவார்கள். நேற்று மொத்தம் 1521 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று காலை ஆறு மணிக்கு தொடங்கிய தூக்க நேர்ச்சை இன்று அதிகாலை வரை நடைபெற்றது.