சபரிமலை: பத்து நாள் பங்குனி உத்திர விழாவிற்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று காலை கொடியேற்று நிகழ்ச்சி நடைபெறுகிறது. பங்குனி உத்திரம் நாளில் ஆராட்டு நடைபெறும் வகையில் சபரிமலையில் பத்து நாட்கள் பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. இதற்காக சபரிமலை நடை நேற்று மாலை 5.30 மணிக்கு திறந்தது. மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். இதில் சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு, நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் கலந்து கொண்டனர். இன்று காலை நடைபெறும் கொடியேற்று விழாவுக்கான கொடிப்பட்டம் கோயில் திருநடையில் சமர்ப்பிக்கப்பட்டது. இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று காலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும், நிர்மால்யதரிசனத்துக்கு பின்னர் நெய்யபிஷேகம் நடைபெறும். காலை ஒன்பது மணிக்கு கொடிப்பட்டத்துக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜை நடத்திய பின்னர், மேளதாளம் முழங்க கோயிலை சுற்றி பவனியாக எடுத்து வரப்படும். 10 மணிக்கு மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு கொடியேற்றுவார். இன்று ஒன்றாம் நாள் விழா முதல் ஏப்., இரண்டாம் தேதி ஒன்பதாம் நாள் விழா வரை தினமும் இரவு 10 மணிக்கு ஸ்ரீபூதபலி என்னும் நிகழ்ச்சி நடக்கிறது.நாளை இரண்டாம் நாள் விழா முதல் ஒன்பதாம் நாள் விழா வரை தினமும் பகல் 12.30 மணிக்கு உற்சவபலி நடைபெறும். ஒன்பதாம் நாள் நள்ளிரவில் சரங்குத்தியில் பள்ளிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். ஏப்., மூன்றாம் தேதி மதியம் பம்பையில் ஆராட்டு நடைபெறும்.