பதிவு செய்த நாள்
25
மார்
2015
11:03
மயிலாப்பூர்: கபாலீஸ்வரர் கோவில் கொடியேற்றத்தை முன்னிட்டு, கிராம தேவதை கோலவிழி அம்மன் கோவிலில் இன்று, சிறப்பு வழிபாடுகள் நடக்க உள்ளன. திருமயிலையின் கிராம தேவதை கோலவிழி அம்மன். பொதுவாக, அம்மன் கோவில்கள் வடக்கு நோக்கி இருக்கும். இங்கு, அம்மன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள்.இந்த அம்மனை பிடாரி, ஊர்க்காளி, பத்திரகாளியம்மன் என்றும் அழைக்கின்றனர். வேப்ப மரம் தலவிருட்சம். இந்த கோவிலில், கணபதி, அனுமன், கருப்பண்ண சுவாமி, நடன காளி, முருகன் ஆகிய உற்சவ மூர்த்திகள் உள்ளனர். வீரமாமுனிவர் இந்த கோவிலுக்கு வந்து, அம்மனை வழிபட்டதாக கூறப்படுகிறது. அதன் நினைவாக இங்கு அவருக்கு தனி சன்னிதி அமைந்துள்ளது.
* ராகு தோஷம் உள்ளவர்கள், அம்மனை வேண்டிக்கொண்டால் தோஷம் நிவர்த்தியாகும்.
* ஒன்பது வாரங்கள் அபிஷேகம் செய்து வந்தால் நன்மைகள் பல நடைபெறும்
* சப்த கன்னியர் சந்நிதியில், வாராகி அம்மனுக்கு, இளநீர் அபிஷேகம் செய்து வந்தால், தீராத நோயும் தீரும்
இன்று காலை 10:00 மணிக்கு, கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து, அர்ச்சகர்கள் சென்று, கோலவிழி அம்மனுக்கு, சிறப்பு வழிபாடுகள் நடத்துகின்றனர். அதையடுத்து, நாளை அதிகாலை 5:00 மணிக்கு, கபாலீஸ்வரர் கோவிலில், கொடியேற்றம் நடக்கிறது. நாளை இரவு, அம்மை மயில் வடிவத்தில் சிவபூஜை காட்சியும், அதையடுத்து, புன்னை, கற்பகம், வேங்கை மர வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடக்க உள்ளன.
- நமது நிருபர் -