பதிவு செய்த நாள்
25
மார்
2015
10:03
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த பங்குனி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், நான்கு மணி நேரம் வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலில், பங்குனி மாத கிருத்திகை விழா நேற்று நடந்தது. விழாவை ஓட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு, பால், பன்னீர் விபூதி, இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 10:00 மணிக்கு, காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுருந்தருளி, மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று கிருத்திகை விழாவை முன்னிட்டு, சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, மொட்டை அடித்தும், மலர், பால் மற்றும் மயில் காவடிகள் எடுத்தும் வழிபட்டனர். நேற்று மட்டும், 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில், நான்கு மணி நேரம் பொது தரிசனத்தில் காத்திருந்து மூலவரை வழிபட்டனர்.
சென்னையிலிருந்து பாதயாத்திரை: நகரத்தார் திருத்தணி பாத யாத்திரைக் குழு டிரஸ்ட் சார்பில், 37ம் ஆண்டு பாதயாத்திரை, வரும் ௩௦ம் தேதி துவங்குகிறது. ௨௯ம் தேதி மாலை, ௬:௦௦ மணிக்கு, சென்னை பவளக்காரத் தெருவில் உள்ள, புது தெண்டாயுதபாணி கோவில் வீட்டில், காவடி கட்டி, இரவு 8:00 மணிக்கு அரோகரா செய்தல்; 30ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு, பாத யாத்திரை துவக்கம் ஆகியன நடக்க உள்ளன. ஏப்., 3ம் தேதி காலை, 9:00 மணி அளவில், திருத்தணி மலைக்கோவிலை அடைந்து, அபிஷேக ஆராதனை; அன்று இரவு திருத்தணி மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை, நகரத்தார் திருத்தணி பாதயாத்திரை குழு டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.