பதிவு செய்த நாள்
25
மார்
2015
11:03
கோவை : வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ள மலைப்பகுதியில் பக்தி பேரமைப்பு சார்பில், தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையில், பூண்டி அருகே வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. 6,500 அடி உயரத்தில், ஏழு மலைகளை தாண்டி அமைந்துள்ளது. கோவிலில் ஆண்டுதோறும் தை, மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் பவுர்ணமி நாட்கள் மற்றும் சிவனுக்கு உகந்த விசேஷ நாட்களில், சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன; லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.கோவிலுக்கு சென்று வரும் பக்தர்கள் வீசும் பிளாஸ்டிக் கழிவுகளால், மலைப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்கும் நோக்கத்துடன், தென்கைலாய பக்தி பேரவை சார்பில், பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளை அகற்றும் பணி கடந்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்டது. வெள்ளை விநாயகர், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, பீமன் களி உருண்டை, சீதை வனம் உள்ளிட்ட இடங்களில் கிடந்த பிளாஸ்டிக் பை, பாட்டில்கள், குப்பை கழிவுகள் அகற்றப்பட்டன. காலை, 8:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடந்த இப்பணியில், நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். 400 கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டு, தரம் பிரித்து அப்புறப்படுத்தப்பட்டன. எதிர்வரும் காலங்களிலும் இதுபோன்ற தூய்மை பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தென்கைலாய பக்தி பேரவையினர் தெரிவித்தனர்.