பதிவு செய்த நாள்
25
மார்
2015
05:03
விஸ்வாமித்திரர் கவுசிகராயிருந்தபோது அவருக்குப் பல புதல்வர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவன் அஷ்டகன். அவன் அஸ்வமேத யாகம் செய்தான். வேள்வி பூர்த்தியானதும், ப்ரதர்த்தனன், வஸுமனஸ், சிபி ஆகிய தன் சகோதரர்களுடன் நாரதரையும் அழைத்துக் கொண்டு நகரம் திரும்பினான். சிபி, நாரதரிடம், நாம் ஐவரும் சொர்க்கம் செல்வதாக வைத்துக் கொள்வோம் நால்வரே வரலாமென காலதேவன் கூறினால், யார் இறங்க நேரிடும் என்றான். அஷ்டகன் இறங்க வேண்டும் என்றார் நாரதர். அதிர்ச்சியுடன் பார்த்தனர் மூவரும். ஒரு சமயம் நான் அஷ்டகனோடு தேரில் உலா சென்றேன். வழியில் காராம்பசுக்கள் மந்தை மந்தையாய் செழித்திருந்தன. இவை யாருடையவையோ? என வியந்தேன். நான் கோதானம் செய்தவை என்று சொன்னான் அஷ்டகன். அவனது ஜம்பம், புண்ணியத்தின் ஒரு பகுதியை அழித்தது என்றார் நாரதர்.
சரி, மூவரே வரலாமென தடுத்தால்? என்றான் சிபி. ப்ரதர்த்தனன் என்றார் நாரதர். ஏன்? என்று சிபி வினவ, நான்கு குதிரைகள் பூட்டிய தேரில் நானும் ப்ரதர்த்தனனும் சென்று கொண்டிருந்தோம். வழியில் ஒரு அந்தணன், பயணம் செல்ல ஒரு புரவி தர இயலுமா? என யாசித்தான். தேரில் பூட்டிய பரிசுகளில் ஒன்றை அவிழ்த்துக் கொடுத்தான் பிரதர்த்தனன். சிறிது தூரம் சென்றபின் மற்றொரு பயணி வந்து இதே போல் யாசித்தான். ப்ரதர்த்தனன் அடுத்த புரவியை அவிழ்த்து ஈந்தான். சிறிது நேரத்தில் மற்ற இரு புரவிகளும் இதேபோல் போயின. நுகத்தடியைப் பிடித்துத் தானே தேரோட்டினான். ஆனாலும், ப்ரதர்த்தனன் மனத்துள், யாசகர்களை எண்ணி குறைப்பட்டுக் கொண்டான். உள்ளத்தளவில் தவறிழைத்தவன் அவன் என்றார் நாரதர். இருவரே லாயக்கானவர் என்றால்? என்று சிபி கேட்க, வஸுமனஸ் என்ற நாரதர் தொடர்ந்தார். அவனிடம் ஒரு புஷ்ப ரதம் இருந்தது. நான் அதை விரும்பினேன். அதனால் அதன் சிறப்பை பலமுறை சொன்னேன். ஆனாலும் அவன் மனம் இசையவில்லை மகான்களின் விருப்பத்தைப் புறக்கணித்து, அழியும் பொருளில் ஆசை வைத்த இவனுக்கு சொர்க்கத்தில் இடமில்லை என்றார் நாரதர்.
சிபி மவுனமாயிருந்தான் உங்களிருவரில் ஒருவர் இறங்க வேண்டும் என்ற நிலை வந்தால்? என்றான் அஷ்டகன். நான்தான் என்ற நாரதர் சொன்னார். ஒருநாள் சிபி தன் புதல்வனுடன் நகரத்தைக் கடந்து பயணித்தான். பிரம்மதேவர் மாறுவேடத்தில் வந்து, ஐயனே, பசிக்கிறது. யான் மனித மாமிசம் மட்டுமே உண்பவன். உன் பிள்ளை ப்ருஹத்கர்ப்பனை நீயே உன் கையால் கொன்று சமைத்து வைத்திரு. சிறிது நேரத்தில் வருகிறேன் என்றார். அவர் சொன்னபடியே செய்தான் சிபி. ஆனால், நான்முகன் வரவில்லை. சமைத்த பாத்திரத்தைத் தலையில் சுமந்தபடி ஊருக்குள் சென்றான். வழியில் ஒரு காவலன். தாங்கள் சொல்லும் அடையாளமுள்ள ஒருவன் களஞ்சியத்தையும் அரண்மனையையும் தீ வைத்துக் கொண்டிருக்கிறான் என்று தெரிவித்தான். எரிந்து கொண்டிருக்கும் ஆயுதசாலை முன் பிரம்ம தேவரைக் கண்டு, ஐயா, தாங்கள் விரத பங்கமுறாமல் சாப்பிட்டு விடுங்கள் என்றழைத்தான் சிபி. நீயே சாப்பிடு, நெருப்பிட்டுப் பொசுக்கிய என் பாபம் அப்போதுதான் தீரும் என்றார் சதுர்முகன். சிபி தயங்காமல் தன் மகனின் இறைச்சியை புசிக்கக் கலத்தில் கை வைத்தான். சட்டென்று அவன் கையைப் பற்றிய திசைமுகன். சினத்தையும், மாயையையும் வென்றவனே. பார் உள்ளளவும் உன் புகழ் நிலைத்து நிற்கும் என வாழ்த்தி ப்ருஹத்கர்ப்பனை உயிர்பித்துக் கொடுத்தார். அப்பேர்ப்பட்ட சிபிக்கு நான் நிகரோ? என்று போற்றினார் நாரதர்.