கார்த்தவீரியனின் பேரன் வீதிஹோத்ரன். அவனுடைய பேரன் துர்ஜயன். மநுநீதி தவறாமல் ஆட்சி செய்த அவன் எவராலும் வெல்ல முடியாத வீரியமுள்ளவன். அவனது மனைவி ரதியை விட அழகுடையவள். ஒருமுறை துர்ஜயன் வேட்டையாடிவிட்டு தாகம் தணிக்க யமுனைக்குச் சென்றான். அங்கே ஸ்நானம் செய்து கொண்டிருந்த ஊர்வசியைக் கண்டான். கண்கள் கலந்தன. இருவர் மனமும் ஒன்றாயின. பல நாட்கள் ரமித்திருந்தனர். ஒரு நாள் அரசனுக்கு ஊர் ஞாபகம் வந்து ஊர்வசியிடம் விடையளிக்கும்படி வேண்டினான். வேந்தே! மறுபடியும் என் ஞாபகம் வருமா? என்று கேட்டாள் ஊர்வசி. நிச்சயம் சந்திப்போம் என்றான் துர்ஜயன். நாட்டுக்கு வந்ததும் அந்தப்புரம் போகவே உதறலாயிருந்தது. இரவு வந்தது. ஒரே தலைவலி. நிம்மதியாய் தூங்க வேண்டும். என்றான் மனைவியின் முகத்தைப் பாராமலே. ஸ்வாமி, பேரழகி ஊர்வசியின் உறவு கிடைத்தும் நாட்டு ஞாபகம் வந்தது நம் மூதாதையர் செய்த புண்ணியம். குலகுருவான கண்வ மகரிஷியை நாளை தரிசித்து, இதற்குண்டான பிராயச்சித்தத்தை செய்து விடுங்கள் என்றாள் அந்தக் கற்புக்கரசி.
மனைவியின் அன்பில் உருகிப்போன அரசன். மறுநாள் கண்வர் உரைத்தபடி கோடி பஞ்சாட்சர ஜபம் செய்ய வனம் புறப்பட்டான். வழியில் கந்தர்வன் ஒருவன் அற்புத நவரத்ன மாலை அணிந்திருப்பதைக் கண்டான். அதை ஊர்வசி கழுத்தில் பார்க்க ஆசை உண்டாயிற்று. கந்தர்வனிடம் கேட்டான். அவன் தர மறுக்க, அவனோடு துவந்த யுத்தம் செய்து ஹாரத்தைப் பறித்துக் கொண்டு யமுனா நதிக்கரை சென்றான். அங்கே, ஊர்வசியைக் காணாமல், பல இடங்களிலும் தேடியலைந்து, கடைசியாக மானஸ ஸரஸில் கண்டுபிடித்தான். நவரத்ன மாலையை அவள் கழுத்தில் சூட்டினான். இருவரும் மீண்டும் பல்லாண்டுகள் கூடிக் களித்தனர். ஊர்வசி ஒரு நாள், உங்கள் மனைவியின் கேள்விகளை எப்படி சமாளித்தீர்கள்? என்று வினவ, அன்பே! அவள் மகா உத்தமி. நடந்ததை அறிந்திருந்தும் சற்றும் முகம் சுளிக்கவில்லை. கண்வரிடம் அனுப்பினாள். நான்தான் பஞ்சாட்சரத்தை மறந்து மோகத்தில் மூழ்கிக் கிடக்கிறேன் என்றான். ஊர்வசிக்கு, அரசியும், கண்வரும் சபித்தால் நாம் நலமாயிருக்க மாட்டோம் என்ற பயம் ஏற்பட்டது. மன்னனுக்கு இதை எடுத்துச் சொல்லியும் அவன் கேளாச் செவியனாயிருந்தான். ஊர்வசி தன் சித்தியால் செம்பட்டை முடியும். பூனைக் கண்ணுமாக மாறினாள். மன்னனுக்கு ஊர்வசி மேல் வெறுப்பு வந்தது. அவளிடம் சொல்லிக் கொள்ளாமலே கிளம்பி ஓராண்டு மூலிகைகளை உண்டு பஞ்சாட்சர ஜபம் செய்தான். காற்றை மட்டுமே கிரகித்துத் தவம் புரிந்தான். பிறகு கண்வரிடம் சென்று, குரு வார்த்தையை அலட்சியம் செய்து மேலும் பாபம் செய்ததற்கு என்ன பரிகாரம்? என்று பணிந்தான். கங்கையில் நீராடி விஸ்வேஸ்வரரைத் தரிசித்து வா என்றார் கண்வர். அதுமட்டுமின்றி, மன்னனைப் பல யக்ஞங்கள் செய்து புனிதமாக்கி மனைவியோடு சேரச் சொன்னார். அடுத்த ஆண்டு ஸப்ரதிகன் என்ற சத்புத்திரன் பிறந்தான். பொறுமையே பெருமை என்று நிரூபித்தவள் துர்ஜயன் பார்யை.