பதிவு செய்த நாள்
26
மார்
2015
12:03
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோவில் குண்டம் விழா, பூச்சாட்டுடன் துவங்கியது. மேட்டுப்பாளையம் ஊட்டி மெயின் ரோடு, காந்தி மைதானத்தில் மிகவும் பழமையான, மைதானம் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் குண்டம் விழா, வெகு விமரிசையாக நடைபெறும். 88ம் ஆண்டு குண்டம் விழா, நேற்று முன்தினம் இரவு பூச்சாட்டுடன் துவங்கியது. கோவில் பூசாரி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பூச்சாட்டினார்.வரும், 31ம் தேதி இரவு கம்பம் நடுதலும், ஏப்., 2ம் தேதி கொடியேற்றமும், 6ம் தேதி தேர்க்கலச பூஜையும், மதியம் குண்டம் திறப்பு ஆகியவை நடக்கின்றன. 7ம் தேதி காலை பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பும், தொடர்ந்து, 8:00 மணிக்கு குண்டம் இறங்குதலும், 8ம் தேதி மாலை பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்தலும், பின்னர் தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஏப்., 9ம் தேதி அம்மன் திருவீதி உலாவும், 10ம் தேதி காலை பால்குடம் எடுத்து வந்து பால் அபிஷேகம் செய்தல், மதியம் அன்னதானமும், மாலையில் மஞ்சள் நீராட்டும், மகா அபிஷேகமும், 13ம் தேதி மறுபூஜையும் நடைபெறுகின்றன. குண்டம் விழா ஏற்பாடுகளை, செயல் அலுவலர் நந்தகுமார் மற்றும் விழாக் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.