பதிவு செய்த நாள்
27
மார்
2015
12:03
பவானி: பவானியில் உள்ள விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் கோவில், பங்குனி உத்திர திருத்தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.பவானி, காவிரி வீதியில் உள்ள சின்ன கோவில் என்று அழைக்கப்படும், விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில், நேற்று காலை, 5 மணிக்கு, கணபதி பூஜையுடன் பங்குனி உத்திர திருத்தேர் திருவிழா துவங்கியது. காலை, 7.30 மணியளவில் காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் உள்ள, கோவில் கொடி மரத்தில், கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. பின்னர் மூலவர்களான காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, மஹா தீபாராதனையை, கோவில் குருக்கள் சுப்ரமணிய குருக்கள் மற்றும் குழுவினர் செய்தனர். பின்னர் இரவு, 7 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடந்தது. வரும், 6ம் தேதி வரை, விழா நடக்கிறது. நேற்று துவங்கிய பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும், 30ம் தேதி இரவு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா, ஏப்., 3ம் தேதி காலை, 5 மணிக்கு விசாலாட்சி உடனமர் காசிவிஸ்வநாதருக்கு கோவில் வளாகத்தில் திருக்கல்யாணம், காலை, 8.30 மணிக்கு திருத்தேரோட்ட திருவீதி உலா நடக்கிறது.பவானி பழனியாண்டவர் கோவிலில் உள்ள மூலவரான பழனியாண்டவருக்கு, பங்குனி உத்திரத்தினை முன்னிட்டு, நண்பர்கள் குழு சார்பில், வரும், 3ம் தேதி கூடுதுறையில் இருந்து தீர்த்த குடம், பால் குடம், சந்தன குடத்துடன் ஊர்வலம் வருதல் நடக்கிறது. பின், பழனியாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தரிசனம் நடக்கிறது.