பதிவு செய்த நாள்
09
ஏப்
2015
11:04
அழகர்கோவில் : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக, வரும், மே, 2ம் தேதி, அழகர் மலையில் இருந்து கள்ளழகர் புறப்படுகிறார். மே, 4ம் தேதி, காலை, 7:00 மணிக்கு, வைகை ஆற்றில் இறங்குகிறார். மதுரை மாவட்டம், அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில், பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா, வரும், 30ம் தேதி துவங்குகிறது. முதல் இரு நாட்கள், காலை, மாலையில், பெருமாள், கோவிலை வலம் வருவார்.
கண்டாங்கி பட்டுடுத்தி..: மதுரை வைகை ஆற்றில் இறங்க, வரும், மே, 2ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, கண்டாங்கி பட்டுடுத்தி, கையில் வேல், கம்புடன், கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப் பல்லக்கில் புறப்படுகிறார்.வழியில், பக்தர்கள் அமைத்திருக்கும் திருக்கண் மண்டகபடிகளில் எழுந்தருள்வார். மே, 3ம் தேதி காலை, 6:00 மணிக்கு, மூன்று மாவடியில், அழகரை பக்தர்கள் வரவேற்கும் எதிர்சேவை நடக்கிறது.
திருமஞ்சனம் : அன்று காலை, 9:00 மணிக்கு புதுாரிலும், மாலை, 6:00 மணிக்கு, அவுட்போஸ்ட்டிலும் எதிர்சேவை நடக்கிறது. அன்றிரவு தல்லாகுளம் பெருமாள் கோவில் செல்லும் கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடக்கிறது.நள்ளிரவு, 2:00 மணிக்கு, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை ஏற்று, தங்க குதிரை வாகனத்தில் புறப்படும் கள்ளழகர், அதிகாலை, 3:00 மணிக்கு, ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.
ஆற்றில் இறங்குகிறார் : மே, 4ம் தேதி, தங்கக் குதிரையில் புறப்படும் கள்ளழகர், காலை, 6:45 மணி முதல், 7:00 மணிக்குள், வைகையில் இறங்குகிறார்.பின், பல நிகழ்ச்சிகளுக்குப் பின், மே, 8ம் தேதி, கள்ளழகர் அழகர்கோவிலுக்கு திரும்புகிறார்.