பதிவு செய்த நாள்
29
ஜூன்
2011
10:06
நகரி: திருமலை லட்டு கவுன்டரில் பக்தர்களுக்கு இதுவரை வழங்கி வந்த 4 லட்டுகளை இரண்டாக குறைத்துள்ளனர். திருப்பதி தேவஸ்தானத்தின் இந்த திடீர் நடவடிக்கைக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்கள், திருப்பதி லட்டுகளை பரமபவித்ர பிரசாதமாக வாங்கிச் செல்கின்றனர். ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளுக்கு இரண்டு லட்டுகளும், பாத யாத்திரையாக வரும் பக்தர்கள், இலவச கியூ மூலம் சுவாமி தரிசனம் செய்து திரும்பும் பக்தர்களுக்கு 10 ரூபாய் விலையில் 20 ரூபாய்க்கு இரண்டு லட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. சுவாமி தரிசனம் செய்து திரும்பும் பக்தர்கள், அதிக அளவில் லட்டு பிரசாதம் தேவைப்படுகிறது என, தேவஸ்தான நிர்வாகத்திற்கு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் தாராளமாக கிடைக்கும் விதத்தில், திருமலையில் அதிகளவில் லட்டு கவுன்டர்கள் திறக்கப்பட்டு, பக்தர் ஒருவருக்கு 100 ரூபாய்க்கு 4 லட்டுகள் வீதம் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் (திங்களன்று) முதல் 2 லட்டுகள் மட்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, சில லட்டு கவுன்டர்களையும் தேவஸ்தான நிர்வாகம் மூடிவிட்டது. இந்த திடீர் நடவடிக்கையினால் பொறுமையிழந்த பக்தர்கள், லட்டு கவுன்டர் அருகே நூற்றுக்கணக்கான பேர் கூடி நின்று எதிர்ப்பு தெரிவித்து, பழையபடி 4 லட்டுகள் வழங்க வேண்டுமென கோஷமிட்டனர். இதனால் இங்கு அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, லட்டு கவுன்டர்கள் மூடப்பட்டது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, பக்தர்களை சமாதானப்படுத்தினர்.