பதிவு செய்த நாள்
29
ஜூன்
2011
10:06
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவில் தேர்களின், கலை அம்சங்களை இரவிலும் ரசித்து பார்க்க, மின்விளக்குகள் பொருத்தப்படுகின்றன. மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேஸ்வரர் சுவாமிக்கும் இரு தேர்கள் உள்ளன. இத்தேர்களில், சுவாமியின் திருவிளையாடல் லீலை சிற்பங்கள், கலையம்சத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. தேரோட்டம் முடிந்ததும், தகரங்கள் அடைக்கப்பட்டு, தேர்கள் பாதுகாக்கப்படும். இதன் சிறப்பை உணராதவர்கள், அங்கு அசுத்தம் செய்வதை தடுக்கவும், தேரின் கலையம்சங்களை ரசிக்கவும், அதைச் சுற்றி பிளாஸ்டிக் கண்ணாடி தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இரவிலும் தேரை ரசித்துப் பார்க்க, மின்விளக்கு வசதி செய்யப்படுகிறது. இதற்கான செலவை, "ஸ்பான்சர் ஏற்கிறார். இதற்கிடையே, கோவிலில் இலவச தரிசனத்திற்கு செல்லும் வழிகள், இரண்டாம், மூன்றாம் பிரகாரங்களில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்காக, தலா 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 32 இன்ச் அளவுள்ள 10 எல்.சி.டி., "டிவிக்கள் பொருத்தும் பணி நடக்கிறது. இதில், 10 நொடிகளுக்கு ஒருமுறை, அலங்காரத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் உற்சவ சிலைகள் ஒளிபரப்பாகும். "மூலஸ்தானத்தில் திரை போட்டிருக்கும் சமயத்தில், கோவில் வரலாற்று, சிறப்புகள் குறித்த குறும்படம் ஒளிபரப்பப்படும் என, நிர்வாக அதிகாரி ஜெயராமன் தெரிவித்தார்.