பதிவு செய்த நாள்
10
ஏப்
2015
10:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஏப்., 30 காலை 9 முதல் 9.30 மணிக்குள் நடக்கிறது. அப்போது கோயிலுக்கு மேல் தாழ்வாக வட்டமடிக்கும் ஹெலிகாப்டரில் இருந்து பக்தர்கள் மீது மலர் தூவவும், பன்னீர் தெளிக்கவும் ஏற்பாடு நடக்கிறது.கோயில் மாநகர் மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா கொடியேற்றம் ஏப்.,21 காலை 11 முதல் 12 மணிக்குள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஏப்.,30 காலை 9 முதல் 9.30 மணிக்குள் கோயில் உட்பிரகாரத்தில் மேல, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் நடக்கிறது.
தோட்டக்கலைத்துறை மூலம் ஊட்டி யில் இருந்து ஐந்து லட்சம் எண்ணிக்கை யில் பூக்கள் வரவழைக்கப்பட்டு திருக்கல்யாண மணமேடை அலங்கரிக்கப்பட உள்ளது. இதற்காக பந்தல் அலங்கார வல்லுனர்கள் வரவுள்ளனர்.திருக்கல்யாணம் நடக்கும் போது கோயிலுக்கு மேல் ஹெலிகாப்டரில் இருந்து பக்தர்கள் மீது மலர் தூவவும், பன்னீர் தெளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக தனியார் சிலர் கோயில் நிர்வாகத்திடம் அனுமதி கோரி உள்ளனர். தனியார் அமைப்பு மூலம் திருக்கல்யாண அறுசுவை விருந்து சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்படுகிறது. திருக்கல்யாணத்தை நேரடியாக பார்க்க வசதியாக மேல, வடக்கு ஆடி வீதிகளில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட உள்ளது. இங்கு வி.ஐ.பி.,க்கள், உபயதாரர்களுக்கு தனி இடம் ஒதுக்கப்படும்.கோயில் உள்ளேயும், வெளியிலும் 12 இடங்களில் மெகா சைஸ் டிஜிட்டல் டிவிக்கள் பொருத்தப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்படும். கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.