பதிவு செய்த நாள்
10
ஏப்
2015
11:04
அவிநாசி : பூண்டியில் நேற்று நடந்த குண்டம் திருவிழாவில், பக்தர்கள், கொளுத்தும் வெயிலில் பூவோடு எடுத்து ஊர்வலமாக சென்றனர். திருமுருகன்பூண்டியில் உள்ள ஆதிமுத்துமாரியம்மன் கோவிலில், 35ம் ஆண்டு பொங்கல் குண்டம் திருவிழா, 31ல் பூச்சாட்டு விழாவுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்கார ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் படைக்கலம், அம்மை அழைத்தல், குண்டத்துக்கு பூ போடுதல், திருக்கல்யாண உற்சவம் ஆகியன நடந்தன.நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்பின், பொங்கல் வைக்கப்பட்டு, அம்மனுக்கு படைக்கப்பட்டது. தலைமை பூசாரி குமாரவேல் தலைமையில், பூவோடு எடுத்து பக்தர்கள் மேள தாளம் முழங்க, ஊர்வலமாகச் சென்றனர். மாலை, தேரோட்டம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஆதிமுத்துமாரியம்மன் இளைஞரணி, மகளிரணி நிர்வாகிகள் செய்திருந்தனர். இன்று காலை மஞ்சள் நீராட்டு விழா, மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.