பதிவு செய்த நாள்
10
ஏப்
2015
11:04
புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், இந்த ஆண்டு நடைபெற உள்ள அமர்நாத் யாத்திரை, சுமுகமாக நடைபெற வேண்டும் என்பதில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அதனால், யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு, மொபைல் போன் சேவை தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதில், அதிக அக்கறை காட்டி வருகிறது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், இமயமலையில் உள்ள அமர்நாத் குகை கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், இயற்கையாக பனி லிங்கம் உருவாகும். இந்த லிங்கத்தை தரிசிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான அமர்நாத் பனி லிங்க தரிசன யாத்திரை, ஜூலை 2ம் தேதி துவங்குகிறது. கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை நடந்த போது, அந்த வழித்தடங்களில் மொபைல் போன் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால், பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த ஆண்டு அதுபோன்ற பாதிப்புகள் ஏற்படக் கூடாது என்பதில், மத்திய அரசு அதிக அக்கறை காட்டி வருகிறது. அதற்கேற்ற வகையில், மத்திய உள்துறை செயலர் எல்.சி.கோயலுக்கு, தொலைத்தொடர்பு துறையின் சிறப்பு செயலர் ரீடா டியோடியா கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், இந்த ஆண்டு நடைபெற உள்ள அமர்நாத் யாத்திரையின் போது, மோபைல் போன் சேவைகள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த பணிகளை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் திறமையாக மேற்கொள்ளும் என, தெரிவித்துள்ளார். மேலும், யாத்திரையின் போது, பிரீபெய்டு சிம் கார்டு இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு, ரோமிங் வசதியை இலவசமாக வழங்குவது குறித்தும், மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. அமர்நாத் யாத்திரை செல்வோர், கரடுமுரடான மலைப்பாதைகள் வழியாகச் செல்கின்றனர். எனவே, யாத்ரீகர்களுக்கு மொபைல் போன் சேவைகள் தங்கு தடையின்றி கிடைக்கச் செய்வது, பல பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும் என, மத்திய அரசு கருதுகிறது.