பதிவு செய்த நாள்
29
ஜூன்
2011
11:06
அழகர்கோவில்: அழகர்கோயில் சுந்தரராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம், ஜூலை 10ல் நடக்கிறது. ஜூலை 6ல் யாகசாலை பூஜை துவங்குகிறது. இக்கோயில் கும்பாபிஷேகம் 1995ம் ஆண்டு நடந்தது. இந்து கோயில்கள் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். இதன்படி 2007ம் ஆண்டு பாலாலய பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர். தொடர்ந்து கோயில் ராஜகோபுரம், அனுமார், ராமர், கல்யாணசுந்தரவல்லி தாயார், ஆண்டாள், கரத்தாழ்வார் சன்னதி கோபுரங்களில் உள்ள சிற்பங்கள் புதுப்பிக்கப்பட்டு, வர்ணம் பூசப்பட்டன. பிரகார தூண்கள், கற்சிற்பங்கள், மேற்கூரை அனைத்தும் கெமிக்கல் பிளாஸ்ட் மற்றும் வாட்டர்வாஷ் முறையில் புதுப்பிக்கப்பட்டது. கோயில் மூலவரான பரமசுவாமி சன்னதி விமானம் தங்கத்தால் ஆனது. இவ்விமானம் 800 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. அதன் பின் நடந்த பல கும்பாபிஷேகத்தின் போதும் மராமத்து மட்டும் செய்தனர். அதனால் கோபுரம் முழுவதற்கும் தங்க முலாம் பூச வேண்டும் என அறங்காவலர் குழுவினர் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் 25 கிலோ தங்கத்தில் விமானம் புதுப்பிக்கப்பட்டது. பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து பெருமாளுக்கு உகந்த நாளான ஜூலை 10ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து இரண்டு மாதங்களுக்கு முன் அரசுக்கு பரிந்துரைத்தனர். அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை. மேலும் சில நாட்களுக்கு முன் அறங்காவலர் குழுவினர் ராஜினாமா செய்தனர். கோயில் நிர்வாக அதிகாரியும் மாற்றப்பட்டார். இதனால் கும்பாபிஷேகம் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் ஜூலை 10ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த அரசு நேற்று அனுமதி அளித்தது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் சுதர்ஷன் தலைமையில், நிர்வாக அதிகாரி செல்வராஜ் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.