கேரளாவில் கல்லே குளங்கரை என்ற இடத்திலுள்ள ஹோமாம்பிகை கோயிலில் மற்ற கோயில்களைப் போல் கர்ப்பகிரஹம் எதுவுமில்லை. கைகள்தான் இக்கோயிலின் கடவுள், நான்கு புறமும் கதவுகள் மூடியிருக்க, சிறு துவாரம் வழியாக கைகளை தரிசிக்கலாம். இந்தக் கைகள் கடவுளாக மாறியது எப்படி? பல ஆயிரம் வருடங்களுக்கு முன் நம்பூதிரி ஒருவர் இந்த ஹோமாம்பிகை அம்பாளையே சதா தியானம் செய்து கொண்டிருந்த போது, நான் உனக்கு அருகிலுள்ள குளத்தின் நடுவே தரிசனம் தருகிறேன். ஆனால் நீ எவரையும் கூட்டிக் கொண்டு வரக்கூடாது. சந்தோஷத்தில் கத்தவும் கூடாது என்று அசரீரியாக அம்பாள் பேசினாள். பின்னர் அக்குளத்தின் நடுவில் அம்பாள் காட்சியளிக்க முடிவு செய்தாள். முதலில் அம்பிகையின் இரு கைகள் மட்டும் குளத்தின் நடுவே எழுந்தருளியபோது, அதைக்கண்ட நம்பூதிரி மகிழ்ச்சியில் அலற, அம்பாளின் கைகளோடு அவளது தரிசனம் நின்றுவிட்டது. அன்றிலிருந்து இந்தக் கைகளே கடவுளாகிப் போனது.