ஐயங்கார் குளம் என்ற இடம் காஞ்சிபுரத்திலிருந்து தென்மேற்கே சுமார் 10 கி.மீ., தூரத்தில் உள்ளது. இங்குள்ள சஞ்சீவராயர் சுவாமி கோயிலையொட்டி அமைந்துள்ள பெரியகுளத்தின் அருகே நடவாவிக்கிணறு ஒன்று உள்ளது. இந்தக் கிணற்றுக்குள் ஒரு மண்டபம் உள்ளது. பதினாறு கால்கள் கொண்ட அந்த மண்டபம் கருங்கல்லால் அமைக்கப்பட்டது. மிகவும் உறுதியானதும்கூட. இது ஓர் அபூர்வமான கட்டடம் என்று ஆய்வாளர்கள் கூறுவர். கிணற்றுக்குள் இருக்கும் அந்த மண்டபம் எப்போதும் நீர் நிறைந்து காணப்படும். சித்ரா பவுர்ணமி அன்று ஒருநாள் மட்டும், கிணற்றிலிருக்கும் நீரை முழுவதுமாக வெளியேற்றி விடுவார்கள். கிணற்றிலுள்ள படிக்கட்டுகள் வழியாக கீழே இறங்கி மண்டபத்தைச் சுத்தப்படுத்தி, அன்று மாலை கிணற்றுக்குள் இருக்கும் பதினாறு கால் மண்டபத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாளை எழுந்தருளச் செய்வார்கள். சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மறுநாள் மாலை ஸ்ரீராமர், லட்சுமணர், சீதாதேவி ஆகியோரையும் அந்த மண்டபத்தில் எழுந்தருளச் செய்து பூஜை செய்வார்கள். சித்ரா பவுர்ணமி அன்றும், அதற்கு அடுத்த நாள் மட்டுமே பூமிக்கு அடியில் கிணற்றுக்குள் இறைவனை தரிசிக்கலாம். அதன்பின், கிணற்று நீர் ஊற்றப்பெருக்கெடுத்து மண்டபத்தையும் கிணற்றையும் நிரப்பிவிடும். இந்த அபூர்வக் காட்சியைத் தரிசிக்க விரும்பும் பக்தர்கள் சித்ரா பவுர்ணமி அன்றும், மறுநாளும் இத்தலத்துக்குச் சென்று தரிசிக்கலாம்.