ஈரோடு ரயில்வே காலனியில் பெரிய வேப்ப மரத்தடியில் பட்டத்தரசி அம்மனை தரிசனம் செய்யலாம். இங்குள்ள அம்மன் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மணப்பேறு, மகப்பேறு வேண்டுவோர் பலர் இவளை வழிபட்டு பலன் பெற்றுள்ளனர். அம்மன் சன்னதிக்கு முன்புறம் அத்தி மரத்தின் அடியில் இயற்கை கணபதியின் தரிசனம் கிடைக்கிறது. வடகிழக்கு மூலையில் நாகர் சன்னதி உள்ளது. அங்கு புற்று போன்ற செயற்கையான அமைப்பை உருவாக்கியுள்ளனர். இதில் பக்தர்கள் வார்க்கும் பாலை பாம்புகள் அருந்திச் செல்கின்றன. குதிரைவாகனம், மந்திர மகாமுனி, குப்பண்ணசாமி, ஐயனார், வீரமலை சாம்புகன் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம். அம்மன் சன்னதிக்கு அருகே மாரியம்மன் ஓவியம் காணப்படுகிறது. அகிலாண்டேஸ்வரி, தண்டபாணி, பட்டத்தரசி அம்மன் சிலைகளும்; துளசி மாடம் ஒன்றும் உள்ளது. ஒரு சமயம், குரங்கு ஒன்று கோயில் வளாகத்தில் இறந்துவிட, அதை அடக்கம் செய்த இடத்தை ஆஞ்சநேயர் சன்னதியாக வணங்குகின்றனர். சுமார் நாற்பது ஆண்டுகள் பழமையான ஆலயம் இது.