ஆனி பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு; திருவண்ணாமலையில் சிறப்பு ஏற்பாடு
பதிவு செய்த நாள்
09
ஜூலை 2025 05:07
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையை பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபட்டு வருகின்றனர். இதில், தினமும், ஆயிரக்கணக்கானோரும், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்களும், 14 கி.மீ., சுற்றளவு கொண்ட மலையை வலம் வந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில், ஆனி மாத பவுர்ணமி திதி நாளை(10ம் தேதி) அதிகாலை, 2:36 மணி முதல், நாளை மறுநாள், 11ம் தேதி அதிகாலை, 3:11 மணி வரை உள்ளதால், இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சிறப்பு ஏற்பாடு; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும், 10ம் தேதி குரு பவுர்ணமியை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள செய்துள்ளது. அதன்படி, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்து வருவோர் காலை, 10:00 முதல் மதியம், 12:00 மணி வரையும், மாலை, 3:00 மணி முதல், 5:00 மணி வரை வடக்கு வாயில் (அம்மணி அம்மன் கோபுரம்) வழியாகவும் நேரடியாக அனுமதிக்கப்படுவர். மேலும், உடல் ஊனமுற்ற சக்கர நாற்காலி உதவி தேவைப்படும் பக்தர்களுக்கு, காலை, 10:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரையும், மாலை, 4:00 மணி முதல், 6:00 மணி வரையும் மேற்கு வாசல் (பேய் கோபுரம்) வழியாக அனுமதிக்கப்படுவர். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|