பதிவு செய்த நாள்
23
ஏப்
2015
11:04
சிதம்பரம்: நடராஜர் கோவில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜைக்கான பூர்வாங்க பூஜைகள் நேற்று துவங்கியது. சிதம்பரம் நடராஜர் கோவில் மகா கும்பாபிஷேகம், வரும் 1ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி, ஆயிரங்கால் மண்டபம் அருகே, வேத முறைப்படி 32 குண்டங்கள் மற்றும் 8 வேதிகைகளுடன் (மேடை) பிரமாண்டமான யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று துவங்கிய, ௧௨ கால, யாகசாலை பூர்வாங்க பூஜையில் தட்சணாமூர்த்தி சன்னதியில் கூச்மாண்ட ஹோமம், சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, முக்குறுணி பிள்ளையார் கோவில் சன்னதியில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கி, 1008 தேங்காய் உடைத்து வழிபாடு செய்யப்பட்டது. கும்பாபிஷேக யாகசாலை பூஜை மற்றும் கும்பாபிஷேகத்திற்கு, குருமூர்த்தி தீட்சிதர் தலைமையில் 32 தீட்சிதர்களுக்கு உத்தரவு பெறப்பட்டது. நிகழ்ச்சியில், அனைத்து தீட்சிதர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து பங்கேற்றனர்.