பதிவு செய்த நாள்
28
ஏப்
2015
12:04
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கோவில் சொத்துகளின் விபரங்களை திரட்டும் முயற்சியில் இந்து சமய அறநிலையத் துறை அதிரடியாக இறங்கியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 246 கோவில்கள் உள்ளன. இவற்றை இந்து சமய அறநிலைய துறை நிர்வகித்து, பூஜைகளுக்கும், கும்பாபிஷேக திருப்பணிகளுக்கும் நிதியுதவி அளிக்கிறது. புதுச்சேரியில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ள போதிலும், இவை பல ஆண்டுகளாக கண்டு கொள்ளவில்லை. இந்த சொத்துகள் யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை. காலப்போக்கில், கோவில் சொத்துகளின் மீது முறையான கண்காணிப்பு இல்லாததால், பல கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கோவில் சொத்துகளின் விபரங்களை திரட்டும் முயற்சியில் இந்து சமய அறநிலையத் துறை அதிரடியாக இறங்கியுள்ளது.
தனி வெப்சைட்: இது தொடர்பாக அனைத்து கோவில் நிர்வாகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி தகவல்களை சேகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அத்துடன், இந்து சமய அறநிலையை துறைக்கென தனி வெப்சைட் ஆரம்பித்து, கோவில் வரலாறு, வழிபாடு, சிறப்புகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களை மக்களின் பார்வைக்கு வெளிப்படையாக வெளியிட திட்டமிட்டமிட்டுள்ளது.
ஒத்துழைப்பு இல்லை: இந்து சமய அறநிலைய துறை செயலில் முழு வேகத்தோடு இருந்தாலும், கோவில் நிர்வாகம் தரப்பில் போதுமான ஒத்துழைப்பு இல்லை. சில கோவில்கள் மட்டுமே தகவல்களை திரட்டி தந்துள்ளன. இதனால் திட்டமிட்டப்படி வெப்சைட்டில் வெளியிடுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
குறைந்த வாடகை: கோவில் சொத்துகள் பல இடங்களில் குறைந்த வாடகைக்கு விடப்பட்டுள்ளன. நகர பகுதியில் பல கோடி மதிப்புள்ள இடங்களுக்கு சொற்ப ரூபாய் வாடகை வசூலிக்கப்படுகிறது. அதனையும் பலர் முறையாக செலுத்துவதில்லை.கோவில் சொத்துகளை அனுபவிப்போர் வாடகை செலுத்தாமல் இருக்கும் தொகை பல கோவில்களில் லட்சங்களை தாண்டுகிறது. இவ்வாறு பாக்கி வைப்போரில் முக்கிய பிரமுகர்களும் அடங்குவர். இதே போல் திருக்கோவில் நிலங்கள் விரிவாக்க பணிகளுக்கு பல விதங்களில் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இது பற்றிய ஒருங்கிணைந்த தகவலும் ஏதும் இல்லை.
தகவல் திரட்டல்: கோவில் சொத்துகள் பற்றிய மூடு மந்திர தகவல்களை இந்து சமய அறநிலைய துறை திரட்ட துவங்கியதால், பல ஆண்டுகளாக எத்தனை ஏக்கர் நிலம் கபளீகரம் செய்யப்பட்டு உள்ளது என்பது விரைவில் வெளிச்சத்திற்கு வந்துவிடும்.