பதிவு செய்த நாள்
29
ஏப்
2015
11:04
ப.வேலூர்: பேட்டை மாரியம்மன் கோவில் விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 3,000 பேர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.ப.வேலூர் பேட்டை புதுமாரியம்மன் கோவிலில், ஆண்டு தோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விழா, கடந்த, 21ம் தேதி இரவு, காப்புகட்டுதலுடன் துவங்கியது.தொடர்ந்து தினமும், காலை, காவிரி ஆற்றுக்கு செல்லும் பக்தர்கள் புனிதநீராடி தீர்த்தம் எடுத்து வந்து கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்துக்கு ஊற்றி வழிபட்டுச் சென்றனர். இரவு, 7 மணிக்கு ஸ்வாமி, யானை, காமதேனு, அன்னம், சர்ப்பம், குதிரை, சிங்கம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று முன்தினம், வடிசோறு வைத்து அம்மனுக்கு படையலிடப்பட்டது. நேற்று, மாலை, 3 மணிக்கு, காவிரி ஆற்றுக்குச் சென்ற, 3,000க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள், புனிதநீராடி, ஊர்வலமாக வந்து, கோவில் முன் ஏற்படுத்தப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடன் செலுத்தனர்.இன்று, காலை, 10 மணிக்கு அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். மாலை, 6 மணிக்கு பொங்கல், மாவிளக்கு பூஜை நடக்கிறது. நாளை (ஏப்., 30) அதிகாலை, 6 மணிக்கு கம்பம் பிடுங்கி ஆற்றில் விடப்படுகிறது. வரும், மே, 1ம் தேதி மாலை, 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.