பதிவு செய்த நாள்
29
ஏப்
2015
12:04
பவானி: பவானி, சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர்திருவிழாவை தொடர்ந்து, ஐம்பெரும் மூர்த்திகள், அறுபத்து மூவர் பெருமக்களுக்கு அருட்காட்சி அளித்தல் மற்றும் திருவீதி உலா நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.நேற்று காலை, 9 மணியளவில், சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் ஐம்பெரும் மூர்த்திகள், அறுபத்து மூவர், திருமுறை ஆசிரியர்கள், சந்தான குரவர்கள், தொகை அடியார்கள் திருமேனிகளுக்கு திருமஞ்சனம், பேரொளி வழிபாடும் நடந்தது.மாலை, 6 மணியளவில், சங்கமேஸ்வரர் கோவிலில் இருந்து சிவனடியார்கள், பக்தர்கள் ஏராளமானோர், பஞ்சமூர்த்திகள், அறுபத்து மூவரையும், திருவீதி உலாவுக்காக, கோவிலில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். வாண வேடிக்கை, மங்கள இசை, வண்ண மலர்கள் தூவி, கூடியிருந்த பக்தர்கள் வரவேற்றனர். கோவில் முன் வந்த வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரருக்கு, மஹா தீபாராதனை நடத்தி, ஊர்வலம் புறப்பட்டது.பொது மக்கள், தங்கள் வீட்டு வாசல் முன் பூக்கோலம் இட்டி, வரவேற்றனர். இரவில், திருவீதி உலாவானது, சங்கமேஸ்வரர் கோவிலை சென்றடைந்தது.பவானி சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை நிர்வாகிகள், சிவனடியார்கள், உள்ளூர், வெளியூர் பக்தர்கள் பங்கேற்றனர்.