பதிவு செய்த நாள்
30
ஏப்
2015
10:04
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் மகா கும்பாபிஷேகம், நாளை காலை, 7:00 மணிக்கு நடக்கிறது.கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில், பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில், 40 ஏக்கர் பரப்பில், நான்கு ராஜ கோபுரங்கள், ஒன்பது வாயில்கள், 15 பிரதான சன்னிதிகள் கொண்டது. இங்கு, 400 தீட்சிதர்கள் பூஜைதாரராக உள்ளனர்.இக்கோவிலில், கடந்த, 1955, 1987ம் ஆண்டுகளில், நான்கு ராஜகோபுரம் உட்பட, அனைத்து சன்னிதிகளுக்கும், மகா கும்பாபிஷேகம் நடந்தது.ரூ.40 கோடியில் திருப்பணி: தற்போது, 27 ஆண்டுகளுக்குப் பின், நாளை, மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கோவில் திருப்பணி, தீட்சிதர்கள், கட்டளைதாரர்கள் மூலம், 40 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுஉள்ளது.யாகசாலை பணிகளுக்கு மட்டும், 9.5 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. கடந்த, 25ம் தேதி முதல், யாகசாலை பூஜைகள் நடந்து வருகின்றன. மகா கும்பாபிஷேகம்: நாளை, 1ம் தேதி காலை, தம்பதி பூஜை, கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜை, கடம் புறப்பாடு செய்து, காலை, 7:00 மணிக்கு, சிவகாம சுந்தரி சமேத ஆனந்த நடராஜ ராஜமூர்த்தி சித்சபை, ஆயிரங்கால் மண்டபம், நான்கு ராஜகோபுரங்கள் ஆகியவற்றுக்கு, ஒரே நேரத்தில், மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.தெருவடைச்சான் உற்சவம்: பின், சித்சபையில், சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜருக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனைக்கு பின், நடராஜர், சித்சபையில் இருந்து கனகசபைக்கு எழுந்தருளுகிறார். இரவு, பஞ்சமூர்த்திகளுடன் தெருவடைச்சான் உற்சவத்தில் நடராஜர் வீதியுலா நடக்கிறது. தேரோட்டம்: மறுநாள், 2ம் தேதி காலை, நடராஜர் சுவாமி சிறப்பு தேரோட்டம் நடக்கிறது. மாலையில், ராஜசபை ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர் எழுந்தருளுகிறார். அன்றிரவு, லட்சார்ச்சனை நடக்கிறது.கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை, பொது தீட்சிதர் செயலர் சர்வேஸ்வர தீட்சிதர், கும்பாபிஷேக கட்டளை ஒருங்கிணைப்பாளர் தியாகப்பா தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.