வேத மந்திரங்கள் ஒலிக்க.. மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2015 09:04
மதுரை சித்திரை திருவிழாவின் 10ம் நாளான ஏப்.30ல் மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு சொக்கநாதருடன், மீனாட்சி அம்மன் சர்வ அலங்காரத்தில் ஆடி வீதி, சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தொடர்ந்து மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்த மணமேடையில் சொக்கநாதர் எழுந்தருளினார். பின்னர் பிரியாவிடை அம்மனுடன், சர்வ அலங்காரத்தில் மணக்கோலத்தில் மீனாட்சி அம்மன் மணமேடையில் எழுந்தருளினார். பின்னர் வேத மந்திரங்கள் ஒலிக்க காலை 9:20 மணிக்கு மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்த போது சுமங்கலி பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றி அம்மனை வழிபட்டனர். திருக்கல்யாண நிகழ்ச்சியில், திருப்பரங்குன்றத்தில் இருந்து பவளகனிவாய் பெருமாளும், முருகப் பெருமானும் வந்திருந்தனர்.