பதிவு செய்த நாள்
30
ஏப்
2015
02:04
சேலம் : சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், சித்ரா பவுர்ணமி தேர்த் திருவிழா இன்று துவங்குகிறது. சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, தேர்த் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டுக்கான தேர்த்திருவிழா உற்சவம், இன்று (ஏப்., 30) துவங்கி, வரும், மே, 6 வரை நடக்கிறது. இன்று மாலையில் புண்யாகம் வாஸ்து சாந்தியுடன் தேர்த் திருவிழா துவங்குகிறது. நாளை காலையில் கொடியேற்றமும், மாலையில் யாகசாலை பூஜையும் நடக்கிறது. மே, 2 மதியம், 12 மணிக்கு பிச்சாண்டவர் உற்சவமும், மாலையில் திருக்கல்யாணத்தை தொடர்ந்து, அன்னதானம் நடக்கிறது. 3ம் தேதி காலையில், கரபுரநாதர், அம்பாள், சோமஸ் கந்தருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகளும், அன்னதானமும் நடக்கிறது. மாலையில் சித்ரா பவுர்ணமி திருத்தேரோட்டம் நடக்கிறது.இரவில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடக்கிறது. 4ம் தேதி காலையில், நடராஜர் தரிசனத்தை தொடர்ந்து வசந்த உற்சவம், கொடி இறக்குதல், பாலிகை விடுதல் ஆகியனவும், மாலையில் காலபைரவர் பூஜையும், இரவில் சத்தாபரணமும் நடக்கிறது.மே, 5ம் தேதி மாலையில் ஊஞ்சல் உற்சவமும், 6ம் தேதி, மஞ்சள் உற்சவம் நடக்கிறது. இந்த தேர்த் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், கட்டளைதாரர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.