Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
ஓங்காரத்தில் பிராணாயாமப்பயிற்சி ஓம் மந்திர வாக்கிய தத்துவங்கள்
முதல் பக்கம் » யோக தீபம்
மஹரிஷி ஸ்ரீ பதஞ்சலியின் யோக சூத்திரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2015
16:32

சமாதி பாதம்

சூத்திரம் 2 :

யோகச்சித்த வ்ருத்தி நிரோத:

சித்தத்தின் விருத்திகளை அடக்குதலே யோகம்

இந்த சூத்திரம் யாவற்று சூத்திரங்களிற்கும் ஒரு திறவு கோலாக இருக்கிறது. மனதின் எண்ண ஓட்டங்களின் தொகையினைத் தான் சித்தம் என்று குறிப்பிடப்படுகிறது. சித்தம் பல நிலைகளில் பல்வேறாக செயல்படுகிறது. நான் என்ற மனதின் முனைப்புத்தன்மை தான் சித்தம்.

இதுவே மனித வாழ்வினைச் சீர்படுத்தவும், சீரழிக்கவும் காரணமாகிறது. ஒவ்வொருவரின் வாழ்வில் துன்பம் விரக்தி, வெறுப்பு, சோகம், கவலை போன்ற அனைத்து விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கும் மனமே காரணமாகிறது. எனவே முதலில் புலன்களிடம் இருந்து மனதைப் பிரித்தெடுத்து எதுவும் நிலையற்றது என்ற கொள்கையை உணர்ந்து, அசல் எது? போலி எது? என்பதையும் கண்டுணரும் வேளை மனதை எண்ணமற்றதாக ஆக்குவது எளிது.

நமது ஆழ்மனம், அதில் பதிந்த எண்ணங்களின் முழுத்தொகுதியும் சித்த விருத்தியாகும். அதனை மனதில் இருந்து வெளியேற்றி அழித்துவிடுதல் என்பதே யோக சித்த விருத்தி நிரோதஹ ஆகும்.

மனிதனின் விசேஷமான மூளையின் இயக்கம் உடலினை அதன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே. அதே மூளையினைக் கொண்டு அதன் மற்றொரு அறியப்படாத பகுதியில் மனதைக் கட்டுப்படுத்தும் அரிய சக்தியினை உணர்ந்து அதன் மூலம் சித்தத்தை சுத்தப்படுத்தக் கற்றுக்கொண்டு விட்டால் மனம் வெறுமை அடைவதோடு, இறைக்கலப்பு அல்லது ஆன்மா இறைவனில் இணைகின்ற இயற்கை இணைப்பு என்ற யோகம் சித்திக்கும்.

விளக்கம் -2

புருஷன் + ஜீவன் = மனித வடிவு

சித்த விருத்திகளை தலைதூக்காதிருக்க எண்ணங்களை முழுவதுமாக அழித்தபின் வருவதுதான். உண்மை ஒளி குன்றாமல் பிராகாசிக்கின்ற நிலையே யாவும் கடந்த நிலை. (கூகீஅNகுஉNகூஈஉNகூ). அந்நிலையை அடைந்தவனே, சுயம்புருஷன் ஆகிறான். அந்தக்கரண உபாதியினின்று விலகி நிற்கிறான். அவனே  யோகத்தில் வெற்றி பெற்ற புருஷனாவான்.

இதற்கு உலக லௌகீகப் பொருட்களின் மீது கொண்ட பற்றை வெற்றி கொள்ள அஞ்சாத சக்தி என்ற வைராக்கியம், திட சிந்தை வேண்டும். இதைக் கொண்டவனே யோக ஸாதகனாக முடியும்

ஐம்பொறிகளால் (பஞ்சேந்திரியங்கள்) கவர்ந்துணரப் பட்டு அனுபவத்தின் (ஸம்ஸ்காரங்கள்) காரணமாக மன விருத்திகளின் அலைகள் எழ எழ எல்லையற்ற முடிவற்ற விருத்திகளின் பரிமாணமாய் மனம்  உருவாவதே சித்தம். எண்ணற்ற  எண்ணத் தொகுப்புகளைக் கொண்ட பெரும் பெட்டகத்தனின்றும் எழும், கடந்த கால மற்றும் முற்பிறவிகளைச் சேர்ந்;த சம்ஸ்காரங்களை ஒவ்வொன்றாக வெளிக்கிளப்பி பின் முற்றிலும் ஒழித்து விடுவதே சித்த விருத்தி அழிப்பு ஆகும். இதனையே மஹரிஷி பதஞ்சலி முனிவர் யோக சித்த விருத்தி நிரோதகா என்று கூறினார்.

விளக்கம் 3 -விருத்தி என்று சொன்னாலே எந்த ஒரு விஷயமும் முடிவுறாமல் தொடர்ந்து கொண்டே இருப்பதாகும். அது எண்ணமானாலும் சரி, செயலானாலும் சரி, எந்த நிகழ்வின் பெருக்கத்திற்கும் விருத்தி என்று சொல்வார்கள். ஆகவே ஸ்ரீ பதஞ்ஜலி மஹிரிஷி அனைத்து மன விருத்திகளையும் எழாது அழிக்க வேண்டும் என்று கூறுகிறார் .அதாவது இல்லாமலாக்க வேண்டுமென்கிறார். மேலும் சத்குரு மன விருத்திகளின் ஊற்றுக்கண்  சித்தத்திலிருந்து வருகின்றது.  சித்தத்துடன், புலன்களிற்கும் புத்திக்கும், அறிவுக்கும் தொடர்பு இருப்பதால் மேலும் சித்தம் நேரடியாக ஆன்மாவுடன் தொடர்பு கொண்டிருப்பதால் ஆன்மா தடையுறாது இருக்க, அந்த விருத்திகளை  எழாது அழித்தே ஆக வேண்டும் என்ற பதஞ்ஜலியின் கூற்றே சமாதி பாதத்தில் அமைந்த யோக சித்த வ்ருத்தி நிரோதக. சித்தத்தின் விருத்திகளை அடக்குதலே யோகம்.

சூத்திரம் 5 :
வ்ருத்தய:  பஞ்சதய்ய: க்லிஷ்டாளக்லிஷ்டா:  

சித்த விருத்திகள் ஐந்து அவை பின்வருமாறு. அதாவது அந்தக்கரணம் என்ற, சொல் நிர்மலமான களங்கமற்ற சத்வ குணத்தின் வடிவு (பரிணாமம்) ஆகும். இவ்வந்தக் கரண நிலையில் கலந்து விடுவதான நிலைகள் ஐந்தாகும். இதனை ஐந்து அவஸ்தைகள் என்றும் கூறுவார்கள். இவைகள் ஷிப்தம், மூடம், விஷிப்தம், ஏகாக்ரஹம், நிருத்தம் எனப்படும். இவ்வைந்து அவஸ்தையாலும் அந்தக் கரணத்தின் (மாறுபாட்டை) அசுத்தப்படுத்துவது ரஜோ-தமோ குணத்தின் மேலீடாகும்.

ஷிப்தம்

ரஜோ குணம் காரணமாக, அந்தக்கரணமானது (மனம்,புத்தி,சித்தம்,அஹங்காரம்) தன் நிலையிலிருந்து சிறிது சிறிதாக வழுவி, அருகிலும் (சமீபத்திலும்) தூரத்திலும் உள்ள கணக்கற்ற சுக துக்கங்களை ஏற்படுத்தும் விஷயங்களில் மனதைத் தேடிச் சென்றடைய வைப்பதும், உலக நடப்புகள் அத்தனையிலும் நாட்டமேற்பட்டு தனது  சம்பந்தப்பட்டதும், தன் சம்பந்தம் அல்லாதவற்றிலும் நியாயமாகவும், அநியாயமாகவும் தலையீட்டையும், ஆளுமையையும் செலுத்தி தனதாக்கிக் கொள்ளலும், எதனையும் மதியாமலும், எதனிலும் பயமில்லாதும், யாவற்றிலும் தன்னையே முன் நிலைப்படுத்தி தனக்குத் தானே முடிசூட்டிக் கொள்ளலும் போன்ற கர்வத்தின் நிலையால் பிரவிர்த்தி (செயல்) மார்க்கத்தில் (வழியில்) பற்றுள்ளதாகச் செய்வதே ஷிப்தமாகும்.

மூடம்

தமோ குணத்தினால் எதைச் செய்யலாம் எதைச் செய்யத்தகாது என பகுத்தறிய இயலாமல்,  எதற்கெடுத்தாலும் அறியாமை மற்றும் இயலாமையாற் கோபம், நியாயத்திற்கு மாறான செயல்களையே செய்வது. வருந்துவதற்குக் காரணமில்லாது எல்லாவற்றிற்கும் வருந்துவது. துக்கம், சோம்பல், பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பது முதலியவற்றில் அந்தக் கரணம் சார்ந்திருப்பது மூடம் எனப்படும்.

விஷிப்தம்

அந்தக்கரண சித்தம் எப்போதாவது தமோ குணவியல்பு குறைந்து, ரஜோகுணப் பற்றுடன் ஸத்வ குணத்தில் கலப்பதால் தர்மம்  செய்து தனக்கெனக் கருதாமல் பிறர்க்கு வழங்குவது, ஞானம்ஸ்ரீ(மிகுஅறிவு), வைராக்கியம்ஸ்ரீ (ஸ்திர திடமனம்), ஐசுவர்யம்ஸ்ரீ(செல்வம்) ஆகியவற்றில் பற்றுதல் அடையும் நிலை விஷிப்தம் ஆகும்

ஏகாக்கிரஹம்

தியானம் செய்யத்தகுந்த தியானப் பொருளை யல்லாது வேறு எதனிடத்திலும் விருத்தி (மன எழுச்சி, கலப்பு, உற்பத்தி) இல்லாதிருத்தல் ஏகாக்ரஹம் எனப்படும். இந்நிலையில் ஏற்பட்ட (சித்த-அந்தக்கரண) விருத்தியால் தியானப் பொருள் அல்லது தியானக் கருவில் சாட்சாத்காரம் என்ற இறை தரிசனம் அல்லது இறைக் கலப்பு அல்லது நன்மை, உதவி அல்லது நற்பயன் அல்லது இவற்றிற்கான நிருபணம் கிடைப்பதோடு, அவித்தையை ஸ்ரீ (மறைக்கப்பட்ட அறிவின் காரணமாக) அஸ்மிதை, ராகம், துவேஷம், அபிநிவேசம் என்ற பஞ்சக் கிலோசங்கள் என்ற ஞானத்திற்குத் தடையானவைகளை  முற்றிலும் விருத்தி யற்று (மேலும் செயல்பட முடியாமல்) அழிக்கப்படுகின்றன. இந்த நிலையே ஸம்பிரக்ஞாத சமாதி என்று விளக்குகிறது.

அந்தக் கரண (சித்தஸ்வரூபம்) நிருத்தம் என்ற நிலையடையும் போது ரஜோ- தமோ, குணங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு சத்வ குணவியல்பு மட்டுமே எஞ்சி நிற்கிறது. சாத்வீக குணவியல்பின் நிருத்த நிலையின் எல்லாவற்றிலும் சிறந்த இந்நிலையில் அனைத்து விருத்திகளும் அற்று விடுவதால் புருஷனுக்கு ஏற்படும் அந்த நிலைக்கு அஸம்பிரக்ஞாத சமாதி எனப் பெயராகும்.  அந்நிலையில் பிராரப்த கர்மம் இல்லாது போவதால் அது மோட்சத்திற்குச் சாதனமாக அமைகிறது. அப்போது அவன் தன் நிலை (சுயம் நிலை)  என்ற சைதன்ய சுபாவம் பெறுகிறான்.

இயற்கையில் ஸ்படிகம் களங்கமற்றதாய் இருப்பினும் அதன் பக்கத்தில் இருக்கும் பொருளின் நிறத்தைப் பெறுகிறது. அப்பொருளை அகற்றிவிட்டால் ஸ்படிகம் அதன் இயல்பான நிறத்தைப் பெறுகிறது.

சூத்திரம்: 13

ஸதி மூல தத்விபாகோ ஜாத்யாயுர் போகா://

தீவிரமாகச் செய்யப்பட்ட மந்திரம், அல்லது தபஸ், அல்லது தவத்தில் சமாதி, எது வேண்டுமானாலும் இருக்கட்டும். தீவிரமாக செய்யப்படும் போது புண்ணியமான கர்மவாசனை, ஏற்பட்டு அதே ஜென்மாவில் பலனை தரத் தொடங்கிவிடும். அடுத்த பிறவியில் என்று அல்ல இந்த பிறவியிலேயே. அதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது என்று ஸ்ரீ பதஞ்சலி முனிவர் கூறுகிறார்.

அதே போல ஈஸ்வரன் ஆகிய  நம்முடைய தந்தை, அவரையோ, அல்லது வேறு மந்திரங்களுடைய  தேவதை களையோ, பொதுவான தேவதைகளையோ, அல்லது மகரிஷிகளையோ, நம்முடைய சற்குருவையோ, யாரை இவர்கள் சுத்த மனத்தோடு ஆராதனை செய்தாலும் அதனால் ஏற்படும் அந்தக் கர்ம வாசனை, புண்ணிய கர்மவாசனை, இந்த பிறப்பிலேயே உனக்கு நன்மை செய்யத் தொடங்கிவிடும். ஒருவேளை இந்தப்பலன்கள்  கிடைப்பதற்கு முன்பே நாம் முடிந்து (மறைந்து) விடுகின்றோம்; என்று வைத்துக் கொண்டால்,  அதாவது தர்ம, புண்ணிய காரியங்களை செய்வதற்கு முன்பு நம்முடைய ஆயுள் முடிந்து விட்டால், இன்னொரு பிறவி தொடரும். நம்மை அடையாது விட்ட அதன் பலாபலன்கள் ஒருபோதும் கிடைக்காமல்; போகாது. அதன் பலன்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். மந்திர உச்சாடன மானாலும் சரி, அல்லது தபஸ் ஆனாலும் சரி, மனம் உருகி முழு மன ஈடுபாட்டுடன் செய்யும் போது அதன் பலன்கள் இந்த பிறவி முழுவதும், அல்லது பல பிறவிகளில் தொடர்ந்து வரும். என்று ஸ்ரீ பதஞ்சலி முனிவர் சொல்லியிருக்கிறார். பிறவிகள் பற்றி (கர்மா தியரி) ஏற்கனவே கூறியதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். மேலும் அது பற்றி விரிவாகப் பார்ப்போம். இனி வரும் வகுப்புகளில்.

மேலே கூறியபடி புண்ணிய கர்ம வாசனையிருப்பது போல் பாவ கர்ம வாசனையும் இருக்குமல்லவா! அப்படியும் இருக்குமானால், இப்படியும் இருக்கும். பாவ, புண்ணிய கர்ம வாசனை பற்றிச் சொல்லுவது என்றால் ஒராண்டு, இராண்டுகள் கூட இந்தப பாடத்தை நடத்தலாம். உங்களுக்கு நான் சிறிதே சொல்கிறேன். கீதையின் கண்ணன் சொன்ன விளக்கம். கர்ம பலன்களிலிருந்து எவரும் தப்ப முடியாது.

அதுவே இயற்கை நியதி. அதனை உணர்ந்து தன்னிலை மாற்றம் கொள்பவர்களுக்கு நான் துணையிருப்பேன் என்கிறார். அவர் அப்படி ஏன் சொன்னார்? கர்மாவினால் பிறவி வருகிறது. அப்படி வருகிற போது ஒரு கர்மாவினால் ஒரு பிறவியா? அல்லது பல கர்மாக்கள் சேர்ந்தது ஒரு பிறவியா? உண்மையில் நாம் ஒரு பிறவியில் பல பிறவியின் கர்மங்களை அனுபவிக்கிறோமா?; இப்படி பல விஷயங்கள் இருக்கின்றன. அவர் சஞ்சித கர்மாவினைப் பற்றி விளக்கமாகச் சொல்லி, அதனை உங்கள் சாதாரண அறிவினால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது என்றார்.;

ஒருவர், இராமா என்றோ, கிருஷ்ணா என்றோ,  சிவா என்றோ, பார்வதி என்றோ  சொல்லலாமா அல்லது  மகா காளி என்று சொல்லலாமா. இதில் எதைச்சொல்ல வேண்டும் என்று கேட்டால் எல்லா மந்திரங்களும் ஒன்றுதான்.

இந்த மந்திரம் உயர்ந்தது, அது தாழ்ந்தது என ஒருபோதும் நினைக்க வேண்டாம். எல்லா மந்திரங்களும் உயர்ந்ததுதான். ஒவ்வொரு விக்னங்களுக்கு ஏற்றவாறு ஒரு மந்திரம் இருக்கிறது. அதை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள். எல்லா மந்திரங்களும் சக்தியூட்டப்பட்டதே. அவைகள் மனிதனைப் பண்படுத்தத்தக்கவையே.

ஓம்-ஒரு சிறப்புப் பார்வை

சூத்திரம் 27

தஸ்ய வாசக ப்ரணவ
 
பிரணவமானது அந்த இறைவனிற்கு வாசகமாகும். இறைவனால் பேசப்படுவது  இறைவனே அதனுள் இருந்து கொண்டு தன்னை வெளிப்படுத்துவது. ஆகவே இறை வனுடைய மொழியும் அதுதான். இறைவனுடைய பெயரும் அதுதான். இறைவன் என்பதும் அந்த ஓம் தான்.

அப்படிப்பட்ட அந்த ஓம் என்றும் புதிய ஒலியாக இருக்கிறது, அது எப்போதும் படைக்கின்ற தன்மை கொண்டு இருப்பதால் அந்த ஓம் என்பது என்றும் புதிது. பிரணவம் என்றும் புதிது. எனவே பிரணவம் பரம்பொருளா கும். இதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஒரு ஒலி மற்றும் ஒரு பொருள் இரண்டிற்கும் ஒரு தொடர்பு உள்ளது. ஆகவே இந்த இறைவன் ஓம் என்ற ஒரு பொருளாக இருக்கின்றான்.

அதற்கு உதாரணம்  சொல்வதானால்  ஒரு குழந்தைக்கு அம்மா என்ற சொல்லினை சொல்லித்தருகிறோம். எவ்வாறு என்றால் நாம் அந்தக் குழந்தையிடம் இது உன்னுடைய அம்மா என்று அறிமுகம்  செய்து வைக்கிறோம், அது புரிந்து கொள்வதற்கு முன்பாக அம்மாவினைப் பற்றிக் கூறி முன்னிலைப்படுத்துகிறோம். அம்மா என்று அந்தக் குழந்தை கூப்பிட்டவுடன் அம்மா என்ற பொருள் அதில் வெளிப்படுத்து கிறது. உடனே அம்மா வருகிறாள். மேலும் அம்மா என்ற சொல்லைக் கேட்டவுடன் அதில் ஒரு கனிவு பாசம் வந்து விடுகிறது. அது ஒரு வித உணர்வாக இருக்கிறது.

அம்மா என்ற சொல் அவளுக்குப் பிடித்தது, பல வகை உறவுகளை சப்தத்திலே நாம் பொருளாக வைக்கிறோம். அது போல ஓம் என்று சொன்னவுடன் இறைவனுக்கு நம்மைப் பிடிக்கிறது, அவன் என்னைக் கூப்பிடுகிறான் என்றறிந்து அவனுக்கு அருள வேண்டும் என எண்ணியும் விடுகிறார். ஏனென்றால் ஓம் என்பது இறைவனுடைய பெயராய் அல்லவா இருக்கிறது. சொல்லும் அதன் சப்தமும் அதன் பொருளும் அதில் உள்ள உணர்வும் இவ்வாறு இருப்பதால்,  அம்மா என்று சொன்னவுடனே தாய் எப்படி மகிழ்கிறாளோ அது போலத்தான் நாம் ஓம் சொல்லும்போது இறைவனும் மகிழ்கிறான், பல விதமான சப்தங்களை உண்டாக்குகிற அமைப்பு மனிதனுக்கு மட்டுமே உள்ளது. சப்தத்தினால் சலனமும், சலனத்தினால் சப்தமும் வந்தது.

சித்தர்கள் ஓம் ஒலி பற்றி  அறிந்து கொண்டார்கள். ஒலிக்கலவையினைப் புரிந்து கொண்டார்கள. எந்த ஒலியினை எந்த விகிதத்திலே கலந்தால் என்ன விழையும் என்று. அ என்பதிலே ஒரு விகிதம் உ என்பதிலே ஒரு விகிதம் ம என்பதிலே ஒரு விகிதம் என்று கலந்துள்ளதை ஆராய்ந்த போது அதற்கு மாபெரும் ஒரு சக்தி இருப்பதையும் உணர்ந்தனர்.

ஓம் அது படைக்கும் சக்தி, ஆக அந்த படைக்கும் சக்தியினால் அவர்கள் மேலும் ஒரு உருவத்தைக் கண்டார்கள். அப்படிப்பட்ட உருவம் கடவுளின் உருவம் என்றுணர்ந்தார்கள். ஓம்; கம் கணபதயே நமஹ என்ற பெயரைச் சொன்னால் அது விநாயகருக்குரிய பெயராக மாறுகிறது. எந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை சொல்லும்போதும் அதற்குரிய தெய்வம் அதனின்றும் வெளிப்படுகிறது.

அந்தந்த தெய்வங்களுக்குரிய பீஜ மந்திரத்தை சொல்லும்போது அந்தந்த உருவங்கள் வருகின்றது. இது கற்பனையல்ல, அந்த உருவத்தில் சில அணிகலன்களைச் சேர்த்திருக்கிறோம், அந்த சக்தி சாதகனுக்கு வரும், எப்படி வரும் என்றால் அந்த உருவை நினைக்க நினைக்க அதன் பிரவாகம் இவனுள்ளே பாயும்.

பிரணவம் என்ற ஓம் மந்திரத்தின் அடிப்படையில் தான் நம்முடைய ஆன்மீக வாழ்க்கை அமைகின்றது, அந்தப் பிரணவம் என்ற ஓம்காரத்தை நாம் அறிந்து விட்டாலே யோகம், ஞானம் என்ற எல்லாவற்றையும் அறிவதற்கு அது வழிகாட்டியாக இருக்கும். நமது சற்குருவினுடைய பிரணவ ஞானம் நமக்கு வேண்டும் என்பதாலே நாம் அந்த ஓம் என்பதைப் பற்றி அடிக்கடி பார்க்கிறோம். அந்தப் பிரணவமாகிய ஓம் தான்  யோக சூத்திரத்திற்கு அடிப்படையாக இருக்கிறது. எந்த நிலையிலே பிரணவத்தை அடைவது, கைக்கொள்வது, பயிற்சி செய்வது என்பதையெல்லாம் நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகப் பார்த்துக்கொண்டிருப்போம். இது ஆன்மீக வாழ்க்கைக்கான பணி. தினசரி குறைந்தது 15 நிமிடங்களாவது பிரணவ ஒலியினைத் தியானம் செய்யுங்கள் அப்போதுதான் பிரணவத்தினுடைய அனுகூலம் ஏற்படும். அது பற்றியும் புரிய வரும்

சாம வேதத்தில் எல்லா மந்திரச்சொற்களும் ஓம் என்பதை முன்னால் கொண்டே ஆரம்பிக்கிறது என்று கூறுகிறார்கள். ம் என்ற சப்தத்தில்தான் அவை ஆரம்பிக்கிறது. ஓம் என்ற பிரணவ மந்திரம் அதை சப்த பிரும்மம்,நாத பிரும்மம் என்று அதைச் சொல்லுவோம்.

உலகம் படைக்கப்பட்டபோது எழுந்தது ஓங்கார த்வனி என்று சொல்லுகிறார்கள், முதன் முதலாக அதிர்வு தோன்றியது அது ஓம் அசைவுதோன்றிய பிறகு உயிர்கள் உற்பத்தி ஏற்பட்டது.

அசைவிற்கு அடிப்படையானது இயக்கம். இயக்கத்தை உருவாக்கியவன். இறைவன், இயங்குகின்ற போது எழுகின்ற சப்தம் ஓம்.இந்த த்வனி எங்கும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு மிருகங்களுக்கும் இந்த சப்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது. அந்த சப்தத்தினுடைய ரேடியேஷனைப் பார்த்து உணர்ந்துதான் இன்று மழை வரும் அல்லது வராது மற்றும் நில அதிர்வு என்பது போன்ற இயற்கை நிகழ்வுகளை  முன்கூட்டியே அறிந்து கொண்டு அவை தம்மை பாதுகாத்துக்கொள்கிறது.

அந்த ஓம் என்ற மந்திரத்தை எவ்வாறு உச்சரிப்பது?

ஓம் மந்திரத்தை சொல்வதற்கு என்று சில நிர்ப்பந்தங்கள் இருக்கின்றன. இறைவனை அழைப்பதற்கும் அதே நிர்ப்பந்தங்கள் பொருந்தும். ஒருவரை அழைப்பது என்றால் அய்யா என்று அழைப்போம். அதே நபர் மிகவும் தூரத்தில் சென்று கொண்டிருந்தால் அந்த அய்யா என்ற வார்த்தையினை ஓங்கி ஒலிப்போம். சில காரியங்கள் ஆவதற்கு ஒரு உருவத்தை உண்டாக்க வேண்டும. ஓம் என்று சொல்வதற்கு முன்பாக அதன் உருவத்தை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஓம் என்ற உருவத்தை மானசீகமாக வரைந்து கொண்டே ஓம்; சொல்ல வேண்டும். அந்த உருவத்தை வரைந்து முடிக்கும் வரை ஓம்  சொல்ல வேண்டும். ஓமிற்கு வரி வடிவங்கள் மொழிவரி வித்தியாசமாக அது இருக்கலாம். ஆனால் ஒலி வடிவம் ஒன்றுதான். ஓம் மந்திரத்தில் அதிக நேரம் ம் என்பதை உச்சரிக்க வேண்டும், அவ்வாறு செய்வதற்கு நிறைய மூச்சுக்காற்று தேவை, எனவே ஒரு அது ஒரு வகை பிராணாயாமமும் ஆகிறது.

ஆகவே இந்த ஓம் த்வனி எங்கும் கேட்டுக் கொண்டிருக்கிறது, யோகிகள் எங்கும் இதனைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். யாராலும் எழுதப்படாத ஓசை அல்லது அனாகத த்வனி என்று இதைச்சொல்வார்கள், நம்முடைய ஆதாரத்தில் ஒன்றான அனாகதம் எப்போதும் ம் என்பதை உச்சரித்துக்கொண்டே இருக்கிறது. ஓம்காரத்தைப் பற்றியும். அதன் உபாசனை பற்றியும் நம்முடைய உபநிஷத்துக்கள் சிறப்பாக கூறுகிறது.

ஓம் என்ற ஒலி கூட உண்மையான ஒலி புதுமையான ஒலி. அது எப்போதும் சிருஷ்டித்துக்கொண்டே இருக்கிறது என்று கூடக் கூறலாம், ஓம் ஒருபோதும் அமைதியாக இருப்பதில்லை அது செயலாற்றிக்கொண்டே இருக்கிறது. நம் உடம்பிற்குள்ளும். இந்த பிரபஞ்சத்திற் குள்ளும் அத்தனை அணுக்களிலும் ஓம் என்பது சப்த ரீதியாக அதனால் வரக்கூடிய அசைவுகளாக அதனால் ஏற்படக்கூடிய படைப்புகளாக புதுப்பித்தலாக நிகழ்த்திக்  கொண்டே இருக்கிறது .

ஓம் என்ற ஒலி எப்போது நிற்கிறதோ அப்போது இந்த பூமியினுடைய சுழற்சி மட்டும் நின்றுவிடுவதல்லாமல் பிரபஞ்சம் அனைத்தும் அசைவற்ற தன்மைக்கு வந்து விடும். ஓம் என்ற ஒலி இல்லையென்று சொன்னால் எந்தத் தாவரங்களும் வளராது. ஓம் என்பது இல்லையென்று சொன்னால் நீர் அதன் இரு கூறுகளாக பிரிந்து விடும், ஆகவே ஆகாய வெளியில் இருக்கின்ற அண்டங்கள் எல்லாம் அவற்றின் இடத்தில் இருந்து பெயர்ந்து விடக் கூடும். அவைகளின் உருவம் மாறுபட்டுவிடும். இவைகள் அனைத்தும் கற்பனையல்ல. ஒரு அறிவியல் சார்ந்த நிகழ்வுகளாகத்தான் இருக்கும். எதுவும் நிலைத்திராமல் ஒன்றுமே இல்லாமல், எல்லாமே சூன்ய நிலைக்கு வந்து விடும். ஆனால் நாம் சொல்வதனால் இவை எல்லாம் நிகழுமா, நிற்குமா என்பதைப் பார்க்கவும் எந்த உயிரும் இருக்காது.

இந்த பிரபஞ்சம் முழுவதையும் இயக்கிக் கொண்டிருப்பதற்கு ஓம் ஒலி ஆதாரமாய் இருக்கிறது. புதிது புதிதாகப் படைத்துக்கொண்டே இருக்கிறது. விதை போட்டு செடி வளர வேண்டும் என்றால் ஓம் இல்லையென்றால் அது வளராது. அதற்கு உரம் இருக்கிறதோ அல்லது நீர் இருக்கிறதோ அது வேறு விஷயம். அதனுடைய வளர்சிதை மாற்றத்திற்கு ஓம் என்பது மிகவும் அத்தியா வசியமானது. ஆகவே நாமும் நீண்ட ஆயுளோடு. நல்ல வல்லமையோடு. நல்ல உணர்வுகளோடு. மனிதன் என்ற பெயரோடு நாம் எடுத்திருக்கின்ற இந்த பிறவி மிக நன்றாக இருக்க வேண்டும் என்று சொன்னால், மேலும் மேலும் வளரவேண்டும் என்று சொன்னால் முடிந்தவரை நாம் அந்த ஓம் என்பதை ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

ஒருவேளை அந்த ஆதார ஒலியை நாம் அதை மறந்து விட்டாலும் அல்லது அதில் நமக்குத் தெரியாமல் போனாலும் என்னவாகுமோ கவலை வேண்டாம். நம் உடலிலேயே தொடர் இயக்கமாய் உடல் ஆதாரத்தினை ஓம் என்று சொல்லும்படியாகவே வைத்திருக்கிறார் இறைவன். ஆகவே நாம் அதைச் சொல்லி அதனுடைய உணர்வுகளை எழுப்புகின்றபோது அந்த உயிராற்றலை நம் உடலில் மேலும்  மேம்படச்செயது விடும்;.
ஓம் என்ற சப்தமும், சப்தத்தின் வடிவமும் ஆகாசம் என்றாகிறது, சப்தத்தினுடைய தூல வடிவம் இந்தப் பிரபஞ்ச வெளி. சப்தத்திற்கு ஒரு பரிமாணம் இருக்கும் என்றால் அது இந்த பிரபஞ்ச வெளிதான் அதனுடைய தூலம்,

சப்தத்தினுடைய சூட்சும வடிவமும் ஆகாசம் தான்.

இந்த ஆகாசத்திற்கும். பிரபஞ்சத்திற்கும் என்ன வித்தியாசம் உள்ளது?

இந்த சப்தத்தத்திற்கு ஒரு உரு. வடிவம் இருக்கும் என்றால் அது ஆகாயமே. ஓரளவு நம்மால் பார்க்க முடிந்த அளவு. ஆகாயம் என்பது  நம் வசிக்கின்ற பூமிக்கு மேலே மட்டும் இருக்ககூடியது என்பதல்ல. சொல்லப்போனால் இந்தப் பிரபஞ்சத்திலே நாம் வசிக்கின்ற பூமியிலே. சுழலுகின்ற இந்த பூமியிலே மேலும் கீழும் அதைச்சுற்றிலும். அதன் உள்ளிலும் ஆகாயம் உள்ளது.

அது சுற்றிவரக்கூடிய எல்லா இடத்திலும் ஆகாயம் இருக்கிறது. அந்த ஆகாயம் என்பது நம்மால் பார்க்கக்கூடிய அளவிலே அல்லது சிந்திக்கக் கூடிய அளவிலே, அல்லது கற்ற அளவிலே, ஆகாயம் ஒரு வெட்டவெளியாய் உள்ளது அவ்வளவே.

அப்படிப்பட்ட இந்த வெட்டவெளி சப்தத்திற்கு ஒரு வடிவம். அப்படியென்றால் பிரபஞ்சம் ஆகாயம் ஆகாதா என்ற ஒரு கேள்வி வரலாம், பிரபஞ்சம் என்பதை எல்லையிட முடியாது. கணக்கிட முடியாது. நினைத்துப் பார்க்க முடியாது, இந்த பிரபஞ்சத்திலே கோடான கோடி கிரகங்கள் உள்ளன, அவை அத்தனையையும் ஒருங் கிணைந்தாலும் அது இந்தப் பிரபஞ்ச வெளியில் ஒரு அணு  அளவு மாத்திரமே.

பூமியினைச் சந்திரன் சுற்றி வருகிறது, பூமிக்கு சாட்டிலைட் என்னவென்று கேட்டால் அது சந்திரன், எந்தக் கோளையும் சுற்றிவரும் துணைக்கோளிற்கு சாட்டிலைட் என்று பொருள் கொள்ளலலாம், பூமிக்கு மிக அருகாமையில் உள்ள சந்திரனைப் பார்ப்பதிலே நாம் ஆவல் கொண்டு விஞ்ஞானம் மூலம் அதில் வெற்றி கண்டிருக்கிறோம்,

நமது சூரியக்குடும்பத்திலே நாம் வசிக்கின்ற இந்த பூமிக்குத் துணைக்கோளாக சந்திரன் இருப்பதைப்போல எத்தனையோ சூரியக்குடும்பங்கள் இந்தப் பிரபஞ்ச வெளியில் உள்ளன. ஒரு மல்லியினை விதைத்தால் அது எவ்வாறு கமகமவென்று நெருக்கமாக வளர்ந்தும் வாசனையும் அளிக்கிறதோ அதுபோல பல்வேறு சூரியக் குடும்பங்கள் இந்த பிரபஞ்ச வெளியிலே நெருக்கமாக உள்ளன. அவற்றை மில்க்கிவேஸ் என்று அழைக்கிறார்கள். அவற்றின் பல நீள வடிவமாகவும் உள்ளன. ஏனென்றால் கோள் என்றால் அது வட்டவடிவமாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஒழுங்கற்ற வடிவமாகவும் இருப்பதாகவும் கூறுகிறார்கள. அதாவது வடிவமற்ற அதாவது வடிவ அளவற்ற கோள்களும் உள்ளன.

ஒளி உமிழும் கோளை நாம் சூரியன் என்று அழைத்து அதை முதன்மைக் கோளாய்க் கொண்டு அதை சூரியக்குடும்பம் என்று அழைக்கிறோம், சூரியனே ஒரு நட்சத்திரம் தான். ஒளியை உமிழக்கூடிய எத்தனையோ சூரியன்களும் பிரபஞ்சத்தில் இருக்கின்றன.

இந்த அண்டவெளியே சலனமற்று இருந்து பிறகு சலனத்தால் ஒரு பெருவெடிப்பு நிகழ்ந்த பிறகு அது பல கோடி துண்டுகளாய் சிதறி சூரியன்களாய் உருவெடுத்தன. சூரியனைப்போல எத்தனையோ நட்சத்திரங்கள் உள்ளன. அத்தனையும் உள்ளடக்கிய பரவெளிதான் இந்த பிரபஞ்சம், அந்த பிரபஞ்சம் தான்  இந்த ஒலிக்கு வடிவு, ஏனென்றால் இந்த சப்தச் சலனத்தினால் இந்தப் பரவெளி உண்டாயிற்று என்கிறார்கள்.
சலனம் என்றால் அசைவு.

ஓம் என்ற சப்தம் எழுப்பாத சலனமே இல்லை. சலனம் என்பதே இந்த சப்தங்கள் எழுப்பியது தான் சப்தங்களால் தான் இந்த சலனம் உண்டாயிற்று. இந்த சப்தத்தினால் அசையாத எதுவுமே இல்லை. இன்று அசைந்து கொண்டிருக்கின்ற அத்தனையுமே இந்த சப்தத்தினால் வந்தது. இந்த சப்தம் எழுப்பாத சலனமே இல்லை என்று கூட சொல்லலாம் புரிந்து கொள்ளுங்கள்.

சப்தத்தினால் அசைவுகள் வந்தன

அவ்வியக்தம்

வ்யக்தம் - அவ்வியக்தம்

அவ்வியக்தம் என்றால் புலப்படாமல் இருப்பது, இந்த பிரபஞ்சம் முதலில் இருந்த நிலையிலும் அது புலப்படாமல் இருந்தது. புலப்படுவது என்றால் காணப்படுவது.

அனைத்தும் அணுக்கூறுகளகாய்ப் புலப்படாத நிலையில் இருந்தது

அவ்வியக்தமாக இருந்த அனைத்தும் இந்த சப்தத்தினால் தான் வியக்தமான இந்த உலகம் வெளிப் பட்டது, வ்யக்தம் என்றால் வெளிப்படுத்தப்படுவது, இந்த சப்தத்தினால் உலகமாக இருப்பது வெளிப்பட்டது என்ற அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒத்துக்கொள்கின்றனர்.

இறைவன் தன்னுடைய மனதால் ஏதோ ஒன்றை நினைத்தான் அது சப்தமாயிற்று. ஓவ்வொரு பொருளிற்கும், ஓவ்வொரு பரிமாணத்திற்கும். ஒவ்வொரு குணத்திற்கும், ஏதோ ஒன்று அதற்கு தொடர்புடையதாய், சார்புடையதாய் நிச்சயம் இருக்க வேண்டும்.

இங்கே குணம் என்பது அதன் இயல்பைக் குறிப் பிடுகிறது. நல்ல குணம். கெட்ட குணம் என்பதைப் போல ஒவ்வொன்றிற்கும் ஒரு குணம் உள்ளது.

ஒரு கம்பியினை நன்றாக இழுத்துக்கட்டி பின் அதை மீட்டினால் சப்தம் வரும். அது அதனுடைய குணம். ஒவ்வொரு பொருளிற்கும். குணத்திற்கும் ஒலி அடிப் படையாக இருக்க வேண்டும். ஆகவே  அந்தக்கம்பியில் அந்த சப்தம் அவ்வியக்தமாய் (மறைந்து) இருந்திருக்கிறது. ஒரு முயற்சியில் ஒரு மீட்டலில் அது வியக்தமாயிற்று.

ஒவ்வொரு பரிமாணத்திற்கும், ஒவ்வொரு குணத்திற் கும். ஒவ்வொரு நிறத்திற்கும் ஒலி அடிப்படை ஒவ்வொரு மொழிக்கும் ஒலி அடிப்படை அதனாலே ஒவ்வொன்றிற்கும் இயற்கை ஒரு அடிப் படையாக உள்ளது. ஒலியின் அடிப்படை மாறுபாடும் தன்மைக்கேற்பப் பொருள்கள் மாறுகின்றன. தங்கம், வெள்ளி யாக மாறுவதற்கு ஒலிதான் அடிப்படை.

அது ஒரு மிகப்பெரிய தத்துவம். ஆக ஒவ்வொரு பரிமாணத்திற்கும் ஒலி அடிப்படை. ஒலியின் அதிர்வுகள் அதிகரிக்க அந்த பொருளின் பரிமாணம் பெரியதாக இறுதியில் பெருவெடிப்பு நிகழ்கிறது, இது பிக் பாங் தியரிஇதைப்போல குணம். மொழி போன்ற ஒவ்வொன்றிற் கும் ஒரு ஒலிதான் அடிப்படையாக உள்ளது. இத்தனை அடிப்படைகளுக்கும் ஒரு அடிப்படை உள்ளது, அதுதான் கடவுளின் இயற்கையான ஒலி ஓம்.

கடவுளுடைய ஒவ்வொரு காரியங்களும். செயல்பாடு களும் ஒலியினால் வந்தது, அவர் ஒலியினை உண்டாக்கினரா இல்லை அது அவரை உண்டாக்கியதா என்பதை நாம் சிந்தித்து ரசிக்க வேண்டும் அல்லது சிந்தித்து வியக்க வேண்டும் (சிரிப்பு).

வேதங்கள் என்ன செல்கின்றன,?

அவர் நினைத்த மாத்திரத்தில் அவர் திருவுளம் கொண்டார் அசைவற்றிருந்த அனைத்தும் அசையத் தொடங்கின. ஆனால் அவை சப்தத்தின் மூலமாக அசையத் தொடங்கின. இவ்வாறு ஓம் என்ற ஒலியினை நமக்கு அளிததவர் இறைவன்.

அந்த ஓம் என்ற ஒலியினை அலை வரிசையினை மேலும்,கீழும் அந்த நோட்ஸின் மூலமாக அந்த ம் என்ற மகாரத்தின் ஒலி விகிதாச்சாரங்கள் பல ஒலிக்கலவைகளின் மூலமாக பல பொருட்கள்  மற்றும் குணங்களை நாம் பெற்றிருக்கிறோம்.

ஆக இந்தப் பிரபஞ்சம் உருவாவதற்கே காரணமாக இருந்த அந்த இறைவன் தந்த ஒலிதான் ஓம்.
இப்போது நம்முடைய அடித்தொண்டை மற்றும் நடுப்பகுதி அதாவது உதடுக்கும் அடித்தொண்டைக்கும் இடையே உள்ள பகுதி, உதடு இந்த மூன்றும் ஒலி எழுப்பக் காரணமாக உள்ளது,

ஒலியினால் ஒன்று அசைந்தது. அந்த அசைவிற்குத் தக்கவாறு ஒரு பொருளும், அதற்கான ஒலி மாற்றமும் ஏற்பட்டது. படைப்பிற்கு ஒலி அவ்வளவு அடிப்படையாக உள்ளது.

சற்று முன்பாக கூறினேன். சப்தம் எழுப்பாத சலனமே இல்லை. அதுபோல நம்முடைய தொண்டையினால் இதுவரை உலகில் என்ன ஒலிகள் இருக்கின்றதோ. இனி வர இருக்கின்ற ஒலி உட்பட அத்தனை ஒலிகளையும் நம்முடைய அடிப்பகுதி. தொண்டை நடுப்பகுதி. உதடு மூன்றையும் இணைத்து அந்த ஒலிகளை எழுப்ப முடியும்,
இத்தகைய சிறப்பு மனிதனைத் தவிர உலகில் எந்த  உயிரினங்களுக்கும் இல்லை.

மிமிக்ரி செய்கிறார்கள் சிலர். நடிகர்களைப்போல, தலைவர்களைப்போல பேசுகிறார்கள். ஒருவர் என்னுடைய குரலின் மேல் ஸ்தாயி, நடு ஸ்தாயி, கீழ் ஸ்தாயி மற்றும் அலைவரிசை போன்றவற்றை சரியாக நினைவில் வைத்து முயற்சிப்பாரேயானால் அவரால் என்னுடைய ஒலியினை எழுப்ப முடியும். மிமிக்ரி என்பது சாதாரண விஷயமில்லை.

அந்த ஒலிக்குறியீடுகளை துல்லியமாக நினைவு வைத்து அதன்படி பேசுவதால் அந்த மிமிக்ரி வெற்றியடை கிறது,

பூனையைப்போல நாம் மியாவ் என்ற ஒலியினை எழுப்புகிறோம், அது எப்படி? அதை காதால் கேட்டோம். அதை நினைவில் வைத்துக்கொண்டு குரல் நாண்களையும், உதடுகளையும் அதற்கேற்றவாறு நெகிழச் செய்து அந்த ஒலியினை எழுப்புகிறோம். கிளிபேசுகிறது என்று சொல்கிறார்கள். இன்னும் ஒன்றிரண்டு பறவைகள் கூட அவ்வாறு இருக்கலாம், கிளி பேச முயற்சித்தாலும் அதன் அடிப்படை சப்தத்திலே எல்லா ஒலிகளையும் அது எழுப்புகிறது, நாம் கிளியைப் போல பேச முடியும். நம்மைப்போல கிளியால் பேச முடியாது. விசேஷமான ஒலியினை ஏற்படுத்தக்கூடிய தன்மை உலகில் மற்ற உயிரினங்களை விட மனிதனுக்கே  அதிகமாக இருக்கிறது.

ஏன் இவ்வாறு சொல்கிறோம் என்றால் அந்த ஓமின் விரிவான அகார உகார மகார இவைகளுடைய அடிப்படைக் கலவை இவனுள்ளே கலந்து இருக்கிறது. ஆகவே அவற்றின் மூலம் இவன் எளிதாக எந்த ஒலியினையும் எழுப்பி விடலாம். பல மிருகங்களின் சப்தங்களையும் எழுப்பிடலாம். மனிதனால் முடியும்.

ஒரு மீன் பேசுமா? மாடு பேசுமா? யானை பேசுமா? அதற்கு எழுப்பக்கூடிய ஒலிக்கு வரையறை உள்ளது மனிதனுக்கு அவ்வாறு இல்லை, நுரையீரல்களின் வழியாக வெளிவருகின்ற காற்று, நாபியில் இருந்து வரும் அழுத்தத்தின் மூலமாக வருகின்ற அதிர்வு, குரல் நாண்களின் மூலமாக மனிதனின் எண்ணப்படி முயலுகின்ற, ஒலியாக இருக்கிறது. இவையெல்லாம் நமக்கு தெரியாமலே நிகழ்கிறது.

இவ்வாறு ஒலிகளைக் கற்றுக்கொண்ட மனிதன் யோசித்து யோசித்து இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒலிதான் நிறைந்துள்ளது. ஒலிதான் படைக்கிறது என்பதை உணர்ந் தான். அந்த ஒலிகளைப் பிரித்து ஆராய ஆரம்பித்தான், அப்போதுதான் வேதம் கிடைத்தது. அந்த வேதம் தான் பல விஷயங்களை நமக்குச் சொல்லிக் கொடுத்தது. அந்த வேதம் எப்படிக் கிடைத்தது என்றால் ஒலியினுடைய பல வேறுபாடுகளை மற்றும் அதிர்வுகளை அவன் தன்னுள்ளே உணர்ந்து கொண்டான். அந்த சப்தங்களுக்கு நாம் மொழியின் மூலம் குறியீடுகளையும், சப்த அர்த்தங்களையும் அதில் நிறுவினோம்.

சப்த வடிவான வேதத்தை ரிஷிகள் அவர்களாக உருவாக்கவில்லை அவர்கள் அதை கண்டுணர்ந்தார்கள். சப்த ஆராய்ச்சியின் மூலம் அவர் வேத அறிவினை பெற்றார்கள், (அ- உ- ம) கலவையான ஓம் என்ற ஒலியே எல்லா அறிவிற்கும் அடிப்படையாக இருக்கிறது என்று அறிந்தார்கள. அவை இறைவனால் நமக்கு கொடுக்கப் பட்டது என்று உணர்ந்தார்கள்.

பிடிவாதமாக  ஒரு குறிப்பிட்ட வழியிலே வாழ்கிறவர் கள் தன்னை இயல்பான வழிக்கு மாற்றிக்கொள்ளவது என்பது மிகவும் கடினமான காரியம் என்று சத்குரு கூறுகிறார். மாற்றிக்கொள்ள முடியாது என்று எதுவுமில்லை, அவர்கள் நினைத்தால் அது முடியும். ஏனென்றால் அவ்வாறு சொல்லி. அவ்வாறு நினைத்து. அவ்வாறு நீங்கள் பழக்கப்பட்டுவிட்டீர்கள். நம்மிடம் உள்ள பழக்கங்கள் சரியானவை தானா என்று நாம் சிந்திக்க வேண்டும், ஒருவேளை சரியில்லாதது இருந்தால் அதை மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்,

உங்களுடைய மனதைப் புரிந்து கொண்ட இறைவன் பல நேரங்களில் உங்களைக் காப்பாற்றுவதற்காகப் பலர் மூலமாக பல நல்ல விஷயங்களைச் சொல்லுவான் அதை வேத வாக்காக எடுத்துக்கொள்ளுங்கள்,

யோக வெற்றி, இறைத்தன்மை, பேரின்பம் முதலிய மேலான அருட்செல்வங்களை நீங்கள் அடைய வேண்டுமானால் பிறவிநோய் கொடியது என்பதை புரிந்து கொண்டு அதன் பிடியில் இருந்து விடுபடவும். உன்னில் உள்ள நான்-ஐ அகற்றி விட வேண்டும். சுத்த அவஸ்தை, சுத்த அஹங்காரம் என்ற அந்த நான் வேறு, நல்லவற்றை செய்து கொண்டிருக்கிறேன் என்று நினைக்காமல் செய்து கொண்டிருப்பவனுடைய அஹங்காரம் அது. தீயவற்றைச் செய்து தீய சிந்தனையில் உள்ளவன்தான் மோசமான அகங்காரத்தை உடையவன்.

சுத்த அவஸ்தை உடையவன் என்ற நல்ல அகங்காரம் நல்ல காரியங்களைச் செய்து கொண்டிருப்பான். தவம் செய்து கொண்டிருந்தாலே நல்ல காரியம் தான். அப்போது அந்த சாதகனுக்கு நாம் தவம் செய்து கொண்டிருப்போம் என்ற நினைப்பு அவனிடம் இருக்கும். அதனால் தவறு இல்லை. அப்போது நான் செய்கிறேன் என்பதை உணர்ந்து கொள்வதற்குரிய நிலைப்பாடு வருகின்றது. அப்படி வருவதால் அப்போது இருக்கிற நான் வேறு, தவறு செய்த போது இருக்கிற நான் வேறு, உன் உடல் நலக்கவலை, சம்சார பந்தக் கவலை, சம்பாத்தியக் கவலை முதலியவற்றில் இருந்து நீ உண்மையாக வெளியே வர வேண்டும், அவை இருந்து கொண்டிருக்கிறது.

அந்தக் கவலை உனக்கு இருக்கின்றபோது அவை நோயாகும்போது அந்த கவலையில் இருந்து நீ வெளியில் வர முடியாதவனாக ஆகின்ற போது நீ எதற்கெல்லாம் கவலைப்பட்டாயே! அவை ஒவ்வொன்றும் உனக்கு ஒரு பாவத்தை சேர்க்கிறதாக மாறுகிறது. உத்தியோகம் கிடைக்கவில்லை, எதிர்பார்த்த சம்பாத்தியம் கிடைக்க வில்லை என்று நீ கவலைப்படுகின்ற போது நீ இறுதியாகச் செய்தது என்னவாக இருக்கும் என்பதை நினைத்துப்பார் இல்லை. பரவாயில்லை அதற்கான சரியான முயற்சியினை மேற்கொள்ள வேண்டும். நிச்சயமாக நீ என்பது உனக்கல்ல, நீ எப்போதும் உனக்கல்ல, பிறருக்குத்தான் என்பதைப் புரிந்து கொண்டு எல்லா உலக பந்தங்களையும் சாட்சியாகப் பார்த்துக் கொண்டு எல்லாவற்றிலிருந்தும் மனதளவில் விலகியிருக்கும் சமயம் நீ ஆன்ம விடுதலை பெறத் தகுதி பெறுவாய். ஆகவே  இந்தப் பாடத்தை முதலில் பேசுகின்ற முறைப்படி இவற்றினைச் சொல்லுவதில் இருந்து மீண்டும் நான்; சுருக்கிச் சொல்லுகிறேன். உங்கள் மனம் உங்களிடம் இருப்பதற்காக நீங்கள் முயற்சி செய்யுங்கள். உங்கள் மனதை இறைவனைத் தவிர எதிலும் வைத்து விடாதீர்கள்.

யோக வெற்றி அடைய வேண்டுமானால் உங்கள் மனதை உங்களோடு வைத்துக்கொள்வது மட்டுமின்றி உங்களுடைய உடம்பினை பற்றி கவலைப்படாமல், சம்சார பந்தத்தைப் பற்றி கவலைப்படாமல், சம்பாத்தியத்தைப் பற்றி கவலைப்படாமல் அவையெல்லாம் இயல்பாக வருபவை என்றும், அவை நம்முடைய கர்மா என்று நினைத்துக் கொள்ள வேண்டும். நாம் ஏன் அவ்வாறு நினைக்க வேண்டும் என்றால் நாம் அந்த பண்பான வழியிலே வந்திருக்கிறோம். எவையெல்லாம் நமக்கு துன்பத்தை தரக்கூடியவை. எவையெல்லாம் நமக்கு அனுகூலம் செய்யக் கூடியவை என்பதைப் புரிந்து கொண்டு செயல்பட்டால் தான் நமக்கு யோகத்தின் கதவுகள் திறக்கும்.

கடவுளைக் குறிப்பிடும் எல்லாப்பெயர்களையும் சேர்த்து, இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்று சொல்வதற்கும் அவன் தன்மைகளை, குண விசேஷங்களை கூறுவதற்கும் அப்பெயர்கள் முயல்கின்றன. இந்த பெயர்கள் எல்லாம் இறைவனுடைய குண விசேஷங்களைச் சொல்வதற்கு உதவியாக இருக்கின்றன. அந்த நாமாக்கள் நமக்கு இறைவனை காட்டித் தருகின்றன. இராமரைப் பற்றி நிறைய பெயர்கள். அதுபோல கிருஷ்ணரைப் பற்றி சிவனைப்பற்றியும் இருக்கின்றன.

ஆனால் அந்தப் பெயர்கள் எல்லாம் எந்த மட்டில் இறைவனைக் காட்டுகின்றன என்றால் அந்தப் பெயரிற்கு உரியவர் இவர் என்பதை மட்டும் வெளிப்படுத்துகிறது, அந்த இறைவனுடைய சில விசேஷமான தன்மைகளை அந்தப் பெயர்கள் நமக்குக் காட்டுகின்றன. கடவுளோ எங்கும் இருந்தவர், இருப்பவர், இருந்து கொண்டிருப்பவர்.
பிரபஞ்சம் முழுவதும் நிரம்பியிருக்கும் இந்த தெய்வப்பொருளிற்கு ஒரு நிலையான பெயர் வேண்டும். அந்த இறைவனுக்குரிய நிலையான பொருளை விளக்கும் பெயரைத் திரும்பச்சொன்னால் இறைவன் நம்முள்ளே தோன்றியும் தீர வேண்டும், அவ்வாறு தோன்றவில்லை என்றால் நாம் அவரைச் சரியான பெயரைச் சொல்லி அழைக்கவில்லை என்றே அர்த்தம். அப்படி அழைத்தால் அவர் வர வேண்டும் என்பதற்கான நிலையினை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பது முதல் நிலை. அதற்கு பின் அந்த பெயரை சொல்லி அழைத்தால் இறைவன் வந்து விடுவார். இறைவன் நம்மிடம் வர வேண்டும் என்றால் அவருடைய பெயர் எதுவோ அதை நாம் சொல்ல வேண்டும்.

அழைத்தாலும், அழைக்காமலும் வருகின்றவன் தான்  இறைவன். அவனின்றி நமக்கு யாரும் உதவி செய்ய மாட்டார்கள். அவன் மட்டுமே உதவி செய்வான் . அதே சமயம் நமக்கு நாமே உதவி செய்து கொள்ளவும் முடியும். ஏனென்றால் நமக்குள்ளே அவன் இருக்கிறான். நமக்குள்ளே இருக்கின்றவனான அந்த இறைவனை அழைத்தால் அவன் நமக்கு உதவி செய்வான் நம்முள் இருந்தவாறே!

இப்போது கார் என்ற பெயரைச் சொல்கிறேன். உடனே கார் நினைவுக்கு வந்து அதில் பயணித்த அனுபவத்தைத் தருமா! இதற்கு முன்பாக ஒருவேளை நாம் காரில் பயணித்திருந்தால் அந்த அனுபவம் நினைவாக வரும். நாமாக காரில் செல்ல வேண்டுமே தவிர அந்த கார் என்ற பெயர் நமக்கு அனுபவத்தை தராது,

வைத்தியர்கள் மருந்துகளைக் குறிப்பிடும்போது சில காய்கறிகளைச் சாப்பிடக்கூடாது, பத்தியமாக இருக்க வேண்டும் என்பார்கள். அவ்வாறு சொல்லும்போது நமக்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது புரிந்து விடும். அது போலக் கடவுள்; என்றால் அது எல்லாப்பொருளிற்குள்; உள்ளும் இருக்கும், எல்லாப்பொருளையும் கடந்தும் இருக்கும், இது மட்டும் போதாது கடவுள் நம்முள் தோன்றவும் வேண்டும். நாம் அதை அனுபவிக்கவும் வேண்டும் அல்லாமல் நம்முடைய பசி தீராது. நமக்குள்ளே அவர் இருக்கிறார் என்பதை நாம் அனுபவிக்க வேண்டும். அந்த நிலைக்கு நாம் வந்து கொண்டிருக்கிறோம்.

ஏனென்றால் கடவுளை வேண்டுவதும், அவரை அடைவதும்தான் நம்மைப்போன்ற சாதகர்களுடைய இலட்சியமாக இருக்கிறது, கடவுளுடைய அந்த முழுத் தன்மையினையும் காட்டி, நாம் அழைத்தவுடன் உடனே எழுந்தும். நம் உள்ளே எழுந்தும் நாம் அவ்வாறு அனுபவிக்கும்படி செய்யக்கூடிய ஒரு கடவுளின் பெயர் வேண்டும். கங்காதரா, கேசவா என்று சொன்னால் அவருடைய இயல்புகளை, சிறப்புத்தன்மைகளை விளக்கக் கூடிய பெயராக அவை உள்ளதே தவிர அவருக்கென்று விசேஷமாக ஒரு பெயர் உள்ளது. மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் தரக்கூடிய, அனைத்தும் நமக்கு அனுபவமாக தரக்கூடிய ஒரு பெயர் உண்டென்று சொன்னால் அது பிரணவமாகிய ஓம் என்ற சொல்.

இந்துக்களுடைய வேதங்களும். உபநிஷத்களும் இறைவனுடைய உண்மைப்பெயரை ஓம் என்று சொல்கின்றன, இறைவன் எந்த குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் சொந்தமானவர் இல்லை. எல்லா சமயங்களும் ஓம் என்பதை இறைவனின் பெயர் தான் என்று கூறுகின்றன. என்றும் சொல்கிறார்கள்.

ஓம் என்ற சொல் மட்டுமே ஆதியும், அந்தமும் இல்லாத, எல்லா ஆற்றலும் நிறைந்த பிரபஞ்சம் முழுவதும் சொல்கின்ற கடவுளின் திருநாமம் என்று ஏன் சொல்ல வேண்டும்.

ஓம் என்ற சொல்லில் அப்படி என்ன ஆற்றல் நிறைந்துள்ளது. பிரபஞ்சம் முழுவதும் பரவிநிற்கின்ற, அங்கிங்கெனாதபடி இறைவனின் பெயராக அது ஏன் விளங்க வேண்டும். கடவுளைப் பற்றி நாம் இதுவரை நாம் முழுவதுமாக புரிந்து கொண்டோம் அல்லது விளங்கிக் கொண்டோம் அல்லது விளக்கி விட்டோம் என்று பெருமை கொள்ள முடியுமா? ஓம் என்பது ஒரு சொல் அல்ல. ஒரு வார்த்தை அல்ல. ஓரெழுத்து. மாமந்திரம். ஒன்றினுள் மூன்றெழுத்துக்கள் சேர்ந்து ஓரெழுத்தாகியது, அந்த ஓர் எழுத்து ஒலிக்கும் அற்புத ஒலி. அது ஒலியாக, ஒளியாக. பொருளாக, சக்தியாக விளங்குகிறது, இவையெல்லாம் பிருஹதாரண்யத்திலும். முண்டோபநிஷத்திலும் வருகின்ற விஷயங்கள், நான் சொல்லவில்லை,

ஓம் என்ற ஒலியே, ஓங்கார பிரணவமே, ஓம் என்ற பொருளே மெய்ஞானப் பேரொளியே, ஓம் என்ற உருவே, வேதங்களின் கருவே, ஓம் என்ற மந்திரமே, மாவெழுத்தே, ஓரெழுத்தே, ஓம் என்ற பூரணமே யாவுலகும் வியாபகமே என்பதை நீங்கள் முன்பு கேட்டிருப்பீர்கள். (மாணவர்களை பார்த்து சொல்கிறார்)

ஓம் என்ற எழுத்தை அ உம என்று எழுதுகிறார்கள். ஆனால் விரித்துச்சொன்னால் உ அ ம் ஓம் ஆகும். இது என்ன புதிதாக இருக்கிறது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நாம் ஓம்மை பற்றி புதிதுபுதிதாக பார்க்கிறோம்.

உபநிஷதம் உ என்பதே முதல் எழுத்து என்று சொல்கிறது. அதனால் நாம் எதையும் எழுத துவங்கும் முன்பாக உ என்று எழுதுகிறோம்.

மாண்டுக்ய உபநிஷதம் முழுவதுமே ஓம் என்ற பிரணவ மந்திரத்தை விளக்கிச்சொல்வதுதான், இந்த உபநி;ஷதம் ஓம் என்பதை நான்காகப் பிரிக்கிறது முதலில் அ இரண்டாவதாக உ மூன்றாவதாக ம, மற்றும் நான்காவதாக அனாகதம் என்று குறிப்பிடுகின்ற ஓமின் நிலை, அனாகதம் என்றால் சுய ஒலி, தானே ஒலிப்பது, தெய்வீக ஒலி, இறைவனின் ஒலி, இது அனாகத சக்கரத்தில் ஒலித்துக்கொண்டேயிருப்பது

இந்த மனமும், இந்த மூளையும் எப்போதும் எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கிறது. எதையாவது செய்யச் சொல்லி. ஆனால் உடம்பு ஒத்துழைப்பதில்லை. இந்த உடலானது எல்லாச் சுகங்களையும் நம்மை அடையச்சொல்கிறது. அதே நேரத்தில் சுகங்களில் துக்கம் இருந்தால் அவற்றையும் நமக்கு அடையாளம் காட்டுகிறது. விதவிதமாக செயல்படவைக்கிறது.

இந்த உடம்பின் அத்தனை செயல்பாட்டிற்கும் அடிப்படைக் காரணமாக ஓம் இருக்கிறது. உனக்கு வயிற்றுவலி வந்தால் உடனே மூளைக்கு ஒரு செய்தி செல்லுகிறது. உடனே வயிற்றுவலிக்கு என்ன செய்தால் சரியாகும். அமிலக்கோளாறா, வயிற்றில் புண்ணா,அதிகமாக உண்டுவிட்டானா என எல்லாவற்றையும் பார்த்து அதை சரியாக்கும் விதமான சுரப்பிகளை செயல்படவைத்து இவனை குணமாக்குகிறது.

மொத்ததில் ஒரு துரித வேலைத்திட்டம் உடம்பிலே நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. இந்த நிகழ்வை நம்மால் உணர முடியும். விலங்குகளால் உணர முடியாது என்று நான் முன்பு கூறியிருக்கிறேன்.விலங்குகளிற்கும் அந்த பாதிப்பினால் அவை உந்தப்பட்டு அவற்றை சில செயல்களைச் செய்ய வைத்து நிவாரணம் தேடச்செய்கிறது, அதுவும் பழக்கத்தினால்தான். புரிந்து கொண்டல்ல.

மனிதன் எல்லாவற்றையும் உணரக்கூடியவனாக இருக்கிறான். எதனால் என்றால் அவனுடைய மூளையில் இருந்து அவனுக்கு உத்தரவுகள் கிடைத்துக்கொண்டே இருக்கிறது, அவனுடைய சித்தம் அவனுக்கு சொல்லிக் கொண்டே இருக்கிறது.

சித்தம் ஒரு வழிப்பாதையாக  உன்னை செயல்பட வைக்கிறது. ஒரு வழிப்பாதையாக செயல்படுத்தபட்டால் வந்த பாவங்களையும் அது ஏற்றுக் கொள்கிறது, ஏற்றுக் கொண்ட பாவங்களையும் அதன் செயல்பாடுகளையும் மனதில் சம்ஸ்காரங்களாக வைத்துக் கொள்கிறது. அதனால் மூளைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று நாம் சொல்கிறோம்.

நாம் சித்தத்தை பற்றித் தான் பேசுகிறோம். மூளையைப்பற்றிக் கவலையேபடுவதில்லை. ஆனால் இப்போது உள்ள விஞ்ஞானம் மூளையை பற்றித்தான் பேசுகிறது. அது தான் முக்கியம் என்கிறார்கள. உணர்வு என்ற ஒன்று தான் நம்மை இயக்குகிறது, அதைத் தான் நாம் சரி செய்ய வேண்டும். அதுதான் சித்தத்தைப் புதுப்பிக்கிறது. சித்தத்தைச் சீராக்குகிறது.

ஆனாலும் சிலர் சொல்கிறார்கள். உன் சித்தத்தின் துணைவன் மூளை. இறுதியாக நீ வெற்றிபெற்று மேலே செல்கிற போது உன் மூளையும் பலன் பெறுகிறது. எவ்விதம் பயன் பெறுகிறது என்றால் அது தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது.  சித்தத்தை அறிந்த பின் சாதகன் பெறுகின்ற சக்திகளை பிரயோகிக்கின்ற அமைப்பினை இந்த உடலில் இருந்து இந்த மூளை இவனுக்கு ஏற்படுத்ததித் தருகின்றது. மூளைக்கும் சந்திரனைப்போல இரண்டாவது பக்கம் உண்டு. யோகி அதை அறிந்து கொள்வதோடு அதை இயக்கவும் செய்கின்றான்.

எல்லா மொழிகளுக்கும் முதல் எழுத்தான அ என்ற அகரம் நாபியில் இருந்து நாதமாக, உயிராக வருகின்றது, அந்த நாதத்தில் நாம் ஸ்வரங்களைச் சேர்க்கிறோம். ஆனால் முதலில் வருவது அ நாதம். குரல் வளையினாலும் அதைத்தொடர்ந்த அமைப்பினாலும் அவை அடிப்படையாகக் கொண்டு பல ஒலிகளை எழுப்புகிறோம். நாபியில் இருந்து எந்த குறியீடும் இன்றி நாதம் என்பது கீழிருந்து மேல் வருகின்றது. தொண்டையினைத் திறந்தவுடன் அந்த நாதக் காற்றொலியாய் வருகிறது. சப்தத்தை வெளியிட வேண்டும் என நினைத்து நீங்கள் ஒலியினை எழுப்பினால் அந்த அ என்பது தான் வரும். வேறு எதுவும் வராது, இந்த அ ஒலி வாயினுள் நன்கு பரவி உதட்டினுள் வந்து சேர்கின்ற சமயம் உ என்ற உயிர் ஒலியாக மாறி ஒலிக்கிறது. அ என்ற ஒலியினை எழுப்பிக்கொண்டே உதட்டினைக் குவித்தால் அது உ ஆகவும் பிறகு வாயினை மூடிய பிறகு அது ம் ஆகவும் ஒலிக்கிறது.

நீங்களே அதை முயற்சித்துப் பாருங்கள்.

உதடுகளை முழுக்க மூடிய பிறகு ம் என்பது வருகிறது, அ என்பது படைப்பினை காட்டுகிறது, உ என்பது காப்பதைக் காட்டும் ஒலியாகவும் ம் என்பது மறைப்பதை காட்டும் ஒலியாகவும்,

அ உ ம என்ற ஓமின் மூன்று எழுத்துக்களும் மொழியின் தொடக்கத்தையும். வளர்ச்சியினையும் முடிவினையும் காட்டுகிறது. இதன் சூட்சமம் என்னவென்றால் எல்லா மொழிகளும், ஒலிகளும் இந்த மூன்றெழுத்தின் ஒலிகளுக்குள் அடங்கி நிற்கின்றன. அதனால் தான் மூன்று எழுத்துக்களும் இணைந்த ஓம் என்ற பிரணவ ஒலி எல்லா ஒலிகளுக்கும் வித்தாக இருக்கிறது. ஓம் என்ற பிரணவ ஒலி முடிந்த பிறகு அது தோற்றுவித்த ஆன்மீக அலைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. எவ்வகையிலும் அதாவது உச்சரிப்பிலும், மனதளவிலும் ஒலித்தால் அதன் பயன் உங்களுக்குக் கிடைக்கிறது, அது சக்தி ஒலியாக அநாகதமாக உயிரில் இயங்கிக்கொண்டே இருக்கிறது, இறைவனின் குரலான ஓம் என்ற ஒலியினை நாம் முழு அமைதி பெற்றிருக்கின்ற போது நாம் செவிகளில் கேட்க முடியும். அந்த அளவிற்கு நாம் அமைதி பெற வேண்டும்,

ஓம் என்ற நாம் எழுப்புகின்ற சப்தம் தான் அநாகதமும், சக்தி ஒலியாக அநாகதமாக உயிரில் இயங்கிக் கொண்டே இருக்கிறது, இன்னும் சொல்கிறார்கள், இந்த ஒலித்துக்கொண்டே இருக்கும் தன்மையினை ரிஷிகள் அஜபம் என்று சொன்னார்கள், அஜபம் என்று சொன்னால் நாம் ஜெபிக்காமலே நாம் சொல்வதன்றி ஒலித்துக்கொண்டே இருப்பதாகும். அத்துடன் ஒளியினையும் இது நமக்கு தருகின்றது,

மற்ற ஒலிகளையெல்லாம் விட்டு விட்டு இந்த பிரணவ ஒலியினை மட்டும் நாம் நம்முள் கேட்பதால் அந்த பயிற்சியினை மேற்கொள்வதால் இனிய அனுபவத்தை நாம் பெற முடியும். ஓம் என்பது ஒலியாக,ஒளியாக ,உருவாக சக்தியாக இருக்கிறது. ஒரெழுத்தும் அதுதான். மாவெழுத்து என்ற இருப்பதிலயே பெரிய எழுத்தும் அதுதான். அந்த ஆதார ஒலியான அ ஒலி அழியாத ஒலி என்றும் இதய ஒலி என்றும் சித்தர்கள் கூறுகிறார்கள், அனாகத ஒலி என்ற பிரணவ ஒலியினைக் கேட்டு அனுபவிக்கும்போது நம்முடைய பேச்சும், செயலும் தானாக நின்று விடும் என்று உபநிஷத் சொல்கிறது, அதற்கு கடும்பயிற்சி வேண்டும்,

ஓம் என்ற மந்திரத்தைச் சொல்லாமல் எந்த மந்திரத்தைச் சொன்னாலும் பயனில்லை. வேதத்தில் எந்த சொல்லைச் சொன்னாலும் அதற்கு முன்னால் ஓம் இருக்கும். அதனுடைய சக்தி மற்ற சொற்களில் இருக்கும்.

 
மேலும் யோக தீபம் »
temple
அத்தியின் புத்திரரை முத்தியின் வித்தகரை
தத்திதன் சோதரரை சித்திதன் நாதகரை
தித்திதன் அஞ்சலரை ... மேலும்
 
temple
மனித வாழ்க்கை என்பது மனிதனாகப் பிறந்த பிறகு அவனுக்கு ஏற்படுகின்றது. அதற்கு முன்பாக அது எவ்வாறு தோன்ற ... மேலும்
 
temple

பிராண யோகா ஏப்ரல் 18,2015

பிராணாயாமம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்பøரிள் நிறைய இருப்பினும் அவை அனைத்தையும் ... மேலும்
 

சர சூத்திரம் ஏப்ரல் 28,2015

சரவழி

சரம் என்பது பிராணாயமத்தில் தான் வருகின்றது.

பத்மாசனத்தில் அமர்ந்து உட்டியான பந்தம் ... மேலும்
 
அடுத்தபடியாக சுழுமுனை நாடியினைப் பார்ப்போம். சுழுமுனை நாடி என்று சொல்கிற போது அது வலது பக்கத்தில்  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.