பதிவு செய்த நாள்
05
மே
2015
04:05
மனிதம் என்பது அதிசயங்களும் அற்புதங்களும் கொண்ட ஒரு பேராற்றல் மிக்க அறிவு ஜீவிகளின் பொதுச் சொல்லாகும். மனிதம் தவிர்த்த ஏனைய உயிரிகள் அனைத்தும் கிட்டத்தட்ட மனிதத்தைப் போலவே ஒத்த வாழ்க்கையை வாழ்கின்றன.
உண்பதில், உறங்குவதில், உய்வதில், உறவு கொள்வதில் என்று அத்தனை செயல்களிலும் எந்த வித்தியாசமும் இன்றி அவைகள் நிறைவேற்றிக் கொள்கின்றன.
ஆம், நமக்குப் பசிக்கிறது. அவைகளுக்கும் பசிக்கிறது. நமக்கும் உடற்பசி உண்டு. அவைகளுக்கும் உண்டு. நாமும் வாழ்கின்றோம். அவைகளும் வாழ்கின்றன. நமக்கு உறக்கம் வருகின்றதோ இல்லையோ பெரும்பாலும் அவைகள் கவலையின்றி உறங்குகின்றன. ஏன் மனிதன் மட்டும் சிறப்புள்ளவனாகக் கருதப்படுகின்றான். பிற உயிரினங்களில் இருந்து எது நமக்கு சிறப்புத் தன்மையினைத் தருவதாக உள்ளது.
அது ஆறாவது அறிவு என்ற ஒன்றா?
அவ்வாறெனில் நம்மைவிடக் குறைந்த அறிவே உள்ள அவைகள்; நம்மை விட நிம்மதியும், கவலையும் இன்றி வாழ்கின்றனவே.
ஒருவேளை மானிடத்திற்கு உடல் பலமா, எனில் யானையும் சிங்கமும் சிறுத்தையும் போன்ற மிருகங்கள் நம்மை விட பலமிக்கவையாக இல்லையா?
தீட்சண்யப் பார்வை சீரிய முகர்ச்சித் தன்மை (முகரும் தன்மை) போன்றவைகள் நம்மை விட பறவைகளும் விலங்குகளும் பெற்றிருக்கின்றனவே.
ஒருவேளை மனமும் நினைவும் என்று சொன்னால் மனிதம் அல்லாத உயிர்கள் அவை வாழ்வதற்கு ஏற்ற படி எந்தவகை அறிவைப் பெற்றுள்ளன?
நம்மைப் போல் வருத்தமோ, துன்பமோ, கவலையோ கொள்வதாகத் தெரியவில்லையே. இவை அத்தனையும் மீறி ஏதோ ஒன்று சிறப்புற்றதாக இருக்க வேண்டும். அதுவே நம்மை உயர்ந்த அறிவு ஜீவியாக்கி உள்ளது.
மனித உடல் இயல்பினில் மன இயல்பினில் பல மடங்கு நம்ப முடியாத அளவுக்கு உடலாற்றல், மன ஆற்றல்களை எழுச்சி பெறச் செய்வதோடு, அவ்விரண்டின் துணை கொண்டும் மூன்றாவதாக ஒரு பேராற்றலை பெறவியலும் என்பதே அது.
இயல்பாகவே வாழ்ந்து இயல்பாகவே மரிப்பதென்றில் லாமல் நம்மையும், இந்த நிலவுலகையும் இப்பேரண்டத்தின் பரிமாணத்தில் ஒப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை. அணுப் பொடியிலும் பொடியாக மிகச் சிறிய சொல்லப் போனால் குறிப்பிடுவதற்கு ஏதும் இல்லையென்ற ஏதோ ஒரு வகைப் பரிமாணம் என்ற நினைவையும் இவ்வனைத்திற்கும் மேலான ஒரு ஒரு உண்மை.
இவ்வத்தனை பிரம்மாண்டத்தையும் படைக்கும் அதை ஆள்பவன் ஒருவன் இருப்பதும் அவன் யாராலும் எவற்றினாலும் படைக்கப்படாத நிரந்தரமான ஒரு இருப்பு என்பதோடு அந்த ரகசியத்தை உணர்ந்து அதனைக் காண விழையும் பேரார்வம் மிக்க ஆன்மீக அறிவைத் தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு ஜீவ எழுச்சியே மனிதத்தின் சிறப்பு.
மனிதனுள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு பேராற்றல் மனிதத்தைப் பிற உயிர்களினின்றும் அவனிடம் விஞ்சி நிற்பதாகும்.
இயற்கையினை அறிவதும் நம் இயல்பின் (சுயத்தின்) அது ஆன்மாவாக இருப்பதே என்றும், நம் சாதாரண உடல், அறிவு சித்தம் என்பவற்றைக் கொண்டே அறியத்தக்கதாய் அமைந்துள்ளது என ஞானத்தைக் கொண்டு அறிந்து சொன்ன பண்டைய சித்தர்கள், மகா புருஷர்கள்.
இவர்களுடன் இறைவனும், தம் பங்கிற்கு அவசியம் ஏற்பட்ட போதெல்லாம் இறங்கிவந்து அவதாரப் புருஷர் களாய் பாத்திரம் ஏற்று இப்பாரத பூமியினை, பவித்திரமான ஞான பூமியாக்கி மெய்ஞானச் சுடரை உணர, அதில் கலக்க, பல்வேறு முறைகள் இருப்பதால் அவரவர்க்கு ஏற்ற மார்க்கத்தை மேற்கொண்டாலுமே உண்மையினைத் தொட்டு விடலாம் என்று வேதம் அதன் மூலத்தால் வெளிப்படுத்துகிறது
உண்மையில் நாம் எல்லோருமே அறியாமைப் புலியால் பின் தொடரப்படுகின்றோம்.
இறைவன் உயிர்களின் மீது கடலினும் மிகு கருணை உடையவராய் இருக்கின்றார். மனித வாழ்வின் லட்சியத்தை பக்குவப்படுத்திக் கொள்ள மனிதனால் நிச்சயம் முடியும்.
கடவுள் என்ற ஆள்பவரும், ஜீவர்கள் என்ற ஆளப்படுபவரும் சுயத்தின் இயற்கைக் கட்டாயத்தில் இருப்பவர்கள் அல்லவா?
அதாவது கர்ம வினைப்படி (சனாதன தர்மத்தின்) அடிப்படையில் இச்செயல்பாடுகளுக்கும் விளைவுகள் இருக்கத்தான் வேண்டும். நான் ஆளப்படவில்லை சுதந்திரமானவன் என்று கூறினால் அவன் ஞானமற்றவனே. குறைந்த பட்ச கட்டுப்பட்ட வாழ்வில் ஒவ்வொரு விதத்திலும் ஜீவன் ஆளப்படுகிறது.
பிரகிருதி (பௌதீக இயற்கை) அதன் நிலைப்புக்காலம், அதன் தோற்றம், பிரபஞ்சத்தின் மொத்தத் தோற்றம், அதன் நிலைப்புக்காலம்; என பல்வேறு கொள்கைகளையும் செயல்களையும் உடையது.
கடவுள் யார்?,
உயிர்கள் யாவை?,
பிரகிருதி என்றால் யாது?,
பிரபஞ்சத்தோற்றம் என்பது என்ன?,
இவைகள் யாவும் காலத்தால் கட்டுப்படுத்தப் படுகின்றன.
உயிர்களின் செயல்கள் யாவை?
அவைகளின் நோக்கம் அவற்றின் இறுதி என்பதெல்லாம் நாம் அறியப்பட வேண்டியது என்பதே வேதத்தின் விளக்கமாய் உள்ளது,
1. இறைவன் (பரம புருஷன்)
2. உயிர்வாழி (ஜீவன்)
3. இயற்கை (பிரகிருதி)
4. காலம் (நித்யம்)
5. செயல். (கர்மம்)
இந்த ஐந்தில் இறைவனும், உயிர்களும், காலமும் நித்யமானவை எப்போதும் இருந்து கொண்டிருப்பவை. செயல்கள் அதாவது கர்மா, முக்குணங்களால் நிகழப்பெறுபவை.
இதனை இறைவன், மனிதனுக்கு (நிலையற்றதாய் விளங்கும் பிரகிருதியின்) இயற்கையில் தோன்றிய மனிதனுக்குக் கொடுத்த சுதந்திரத்தின் வழியாக வந்துற்றது. முக்குணங்கள் நற்குணம் (சத்வ), தீவிர குணம் (ரஜோ), அறியாமை (தமோ) நினைவிற்கெட்டாத காலத்தில் இருந்து பல்கோடிப் பிறப்பினின்றும் இயற்கை குணஇயல்புக் கலவையாலும், நித்யமான காலத்தின் பார்வையாலும், நம் செயல்களின் பலன்களால், நாம் துன்புறவோ அல்லது இன்புறவோ செய்கின்றோம்.
வாழ்வின்; யாவற்று நிலையிலும் நம் செயல்களின் விளைவுகளாலயே துன்பம், இன்பம் என இருவினையை ஏற்க வேண்டியவர்களாகின்றோம். இதுவே கர்மம் எனப்படுவது.
வைணவ தத்துவப்படி உலகின் தோற்றம் பொய்யாக ஏற்றுக்கொள்ப்படுவதில்லை. அது உண்மையாக ஆனால், நிலையற்றதாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
உவமையாகக் கூறப்போனால்: வானில் வந்த மேகம் மழை தருகிறது. பயிர்கள் செழிக்கின்றன. அதே சமயம் மழைக்காலம் தீர்ந்தவுடன் மேகங்கள் அகன்று விடுகின்றன. மழையில் வளம் பெற்ற யாவும் வாடியும் விடுகின்றன. இது போலவே பௌதீகத் தோற்றம் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தோன்றி சில காலம் இருந்து பின்மறைகிறது. இது நிலையற்றதற்கு ஒரு விளக்கம்.
எனவே இயற்கையின் செயல்கள் யாவும் இவ்வாறானவையே. இதுபோல கர்மம் நிலையற்றதே. நிச்சயமாக, நித்தியமானதல்ல. எந்த ஒரு செயல்களின் விளைவுகள், பின் விளைவுகள் இவற்றினின்றும் விடுதலை பெற எவ்வித செய்கையினை நாம் செய்ய வேண்டும் என்பதை நாம் சந்தேகமில்லாமல் அறிய மாட்டோம்.
உயிர்கள் தம் உடல் பற்றிய (சம்பந்தப்பட்ட) உணர்வுகளையே உடையவை. ஆனால் இறைவனோ எல்லா உடல்களையும் உணர்பவன்.
தூய்மையில் சத்வ குணத்தில் இருந்து செயல்களின் விளக்கம் யாவை என ஜீவன் புரிந்து கொள்கையில் இந்த கர்மங்களை மாற்றிவிட முடியும். அவ்வாறு செய்வானே யானால் கடந்த கால செயல்களின் விளைவுகளையும் அதன் பின் விளைவுகளையும் மாற்றிவிட முடியும். எனவே கர்மம் நித்யமானதில்லை. முன் கூறியது போல இறைவன் ஜீவன், காலம் இவைகள் மட்டுமே நித்யமானவை. கர்மம் மாறுதலுக்கும், மாற்றுதலுக்கும் உட்பட்டவை.
இப்பிரபஞ்ச இயற்கையில் பல்வேறு அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இயற்கையின் சீற்றமோ, இயற்கையில் மாறுதலோ, மாறும் இயற்கைச் சூழலோ, அதிக வெப்பமோ, அதிகக் குளிரோ, அதிகக் காற்றோ, பேரிடர் அழிவுகளோ, நல் வளங்களோ, மனித பொது மன மாற்றமோ, மக்களைச் சமூக இயக்கமாகவும், அரசின் இயக்கமாகவும் மாற்றும் தலைகீழ் மாறுதல்களோ, இவைகளால் எல்லாம் ஏற்படும் புதுப்புது சூழல்களால் எவரும் எதிர்பாராதவாறு நிகழ்வுபெற்றன என்றால் இறைவனின் கருதுதலால் அன்றி இவைகள் (அதிசயங்கள்) நிகழந்திருக்க முடியாது.
இன்னும் பலப்பல நிகழ இருப்பவையாகவும் இருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் ஒரு நாயகன், ஒரு ஆளுநன் இருக்கின்றான். அவனே செயல்படுகிறான். ஆளப்படாத ஒரு பொருளைத் தோற்றுவிக்க முடியாது. ஆண்டவன் இருப்பதை உணராதவரை அவ்விதம் இருப்பவர்கள் சிறுபிள்ளைத்தனம் கொண்டவர்களே.
குதிரையாலோ, மாட்டினாலோ, வேறு ஒரு மிருகத்தாலோ இழுக்கப்படாத நிலையில் ஒரு பேருந்து ஓடுவதை வினோதமாகச் சிறுகுழந்தை அதன் அறியாத் தன்மையில் பார்க்கலாம். ஒவ்வொரு இயந்திரத்திற்குப் பின்னும் ஒரு மனிதன், இயக்குபவன் உள்ளான் என்று அக்குழந்தை அறிய மாட்டாது.
மனிதனின் தூய உணர்வின் செயல்கள் இறைவனின் இச்சையுடன் ஒருங்கிணைந்து நிற்கும். அது அவனை மகிழ்விக்கும். அதற்காக உலகியல் செயல்களை எல்லாம் அவன் நிறுத்தி விட வேண்டுமென்பதில்லை. அதே சமயம் அவனுடைய செயல்கள் சுத்தப்படுத்தப்பட வேண்டும்.
சுத்தமான செயல்களே பக்தி என்று அழைக்கப் படுவதாலும், பக்தியின் செயல்கள் சாதாரணச் செயல்கள் போலத் தோன்றலாம். ஆனால் அவைகள் களங்கப்படாத தாகும். நடத்தையினை விட மனப்பாங்கே முக்கியத்துவம் பெற்றவையாகும்.
உடல் சம்பந்தமான கருத்துக்களில் இருந்து ஒருவனை விடுதலை செய்வதற்காகவே வேத நூல்களில் பல்வேறு உபதேசங்கள் அருளப்பட்டன
மானுடனை நேரடியாகவே ஆன்மாவின் தொடர்புடைய வனாக்கி ஆன்ம விடுதலை பெற உதவி செய்தவன் கண்ணன். அவ்வுதவியைப் பெற பக்குவம் இன்றி அர்ஜுனன் இருந்தான். இறைவனே அவனை வழிநடத்தி மேம்படச் செய்தார். வாழ்வில் உடலோடு தொடர்புடைய எண்ணங் களில் இருந்து ஒருவன் விடுபட வேண்டும். இதுவே ஆன்மீகவாதியின் துவக்கச் செயலாகும். விடுதலை பெற விரும்புவன், முதலில் அவன் இந்த ஜட உடல் அல்ல என்பதை உணர வேண்டும்.
முக்தி அல்லது விடுதலை என்றால் பௌதீக உணர்வில் இருந்து சுதந்திரம் பெறுவதே ஆகும்.
அந்த உணர்வு என்பது யாது? அவ்வுணர்வு நான் இருக்கிறேன் என்பது. எனில் நான் என்பது யாது? களங்கப்பட்ட நிலையில் நான் காண்பது, துய்ப்பது, யாவும் என்னால் அடையப்படுகிறது என்பதாகும்.
இறைவனின் இந்த பிரபஞ்சத்தில் உறுப்பான ஜீவர்கள், ஆள்பவனுடன் இணைந்து செயல்படுபவர்களே.
உதாரணமாக - ஒரு இயந்திரத்தின் உறுப்பு, அந்த முழு இயந்திரத்துடன் இணைந்து செயல்படுகிறது. அது போல இவ்வுடலின் ஒரு அங்கம், இவ்வுடல் முழுவதுடனும் இணைந்து செயல்படுகிறது.
கை கால்கள், கண்கள் அனைத்துமே உடலின் பாகங்களே. அவை உண்மையில் ஆள்பவை அல்ல, வயிறு ஆள்கிறது. கால்கள் அசைகின்றன. கைகள் உணவை எடுத்து அளிக்க பற்கள் அரைக்க, உடல் ஜீரண உறுப்புகள் சகிதம் வயிற்றைத் திருப்தி செய்வதிலே ஈடுபடுகின்றன.
வேரில் நீருற்றுவதில் அத்தாவரம் வளம் பெறுவது என்பது போல், இறைவன் ஆள்பவன், ஆக்குகின்றவன்.
அவனைத் திருப்தி செய்ய ஒத்துழைக்க வேண்டிய வர்களே நாம். கைவிரல்கள் வயிற்றுக்கு உணவு அளிப்பதற்குப் பதில், விரல்களே உணவினை உட்கொள்ள வேண்டும் என நினைத்தால் அது ஏமாற்றமே அடையும்.
ஒரு சாதாரண மனிதனின் குணம் நிச்சயமாக தவறு செய்யக்கூடியதே. அது பெரும்பாலும் மதி மயங்கியே இருக்கின்றது. மற்றவரை ஏய்க்கும் குணமுடையதாலும், பக்குவமற்ற புலன்களால் கட்டுப்பட்ட ஒருவன் இறைவனை அணுகுதல் எளிதல்ல.
வேதம், வேதத்தின் சாராம்சமான (மனிதத்திற்காக) உபதேசித்த வேதம், பகவத்கீதை. இது தவிர அருளாளர் களால், ரிஷிகளால், சித்த புருஷர்களால், உபதேசிக்கப்பட்ட பல்வேறு வேத உபன்யாச விரிவுரைகள், அறிவுரைகள், யாவும் சனாதன தர்மத்தின் உண்மை வெளிப்பாடுகளேயன்றி வேறு எதுவும் இல்லை.
சனாதன தர்மம் ஒரு மதமல்ல. அனைத்து மதங்களில் ஆணி வேரென அவைகளில் ஆங்காங்கே காணப்படும் அரிய பெரிய நீதிகளையே அவைகள் புகழ்கின்றன. சனாதன தர்மத்தை என்னவேண்டுமானாலும் பெயரிட்டு அழைக்கலாம். காலமற்ற சனாதன தர்மத்தில் கூறப்படாதவைகள் என்பது எதுவும் இல்லை.
தனி மனிதர்களால் சில அருளாளர்களால், உருவாக்கிய கோட்பாடு, மார்க்கங்களில் இல்லாதவைகள் நமது சனாதன தர்மத்தில் உள்ளது. சனாதனம் அல்லாத மத நம்பிக்கைக்கு மனிதச் சரித்திரத்தின் கால அட்டவணையில் ஏதாவது துவக்கம் இருக்கலாம்.
ஆனால் உயிர்களுடன் நிரந்தரமாக இருக்கும் சனாதன தர்மத்தின் சரித்திரத்திற்கு இது போன்ற ஆரம்பமே இல்லை.
சனாதனத் தர்மம் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தின் இன வழியல்ல. நித்யமான கடவுளுடன், நித்யமான ஜீவர்களின், நித்யமான உறவின், நித்தியமான இயக்கமே ஆகும்.
ஸ்ரீக ராமனுஜ ஆச்சாரியர் அவர்களின் முடிவுக்கு ஏற்ப சனாதனம் என்ற சொல்லுக்கு ஆரம்பமும் முடிவும் அற்றது என்பதே. சனாதன தர்மம் முன்பே குறிப்பிட்டபடி ஜீவனின் நித்யமான கடமை ஆகும்.
நீரில் இருந்து திரவத் தன்மையினைப் பிரிக்க முடியாது.நெருப்பில் இருந்து வெம்மையினையும், ஒளியினை யும் எடுத்துவிட முடியாது என்பது போல, ஆன்மாவின் நிரந்தர இயக்கத்தையும் அதனிடமிருந்து பிரித்துவிட முடியாது.
தர்மம் என்ற சொல் ஒரு பொருளுடன் நிரந்தரமாக இருக்கிறது என்பதே.
இது போன்று வாழும் உயிரின் முக்கியமான, இன்றியமையாத, அங்கத்தை எது என்று கண்டுபிடிக்க வேண்டும். வேதம் இதனை வெளிப்படுத்தியது. அது (இறைவன், கடவுள், பரமாத்மா, ஈஸ்வரன்) என்றெல்லாம் அதன் நிலையானத் துணை அவரது ஒரு அங்கமான நமக்கென்றும் இருக்க வேண்டும்.
எப்பிறப்பிலும் எந்நிலையிலும் அதுவே நம் அசைக்க முடியாத நம்பிக்கை எனக் கொள்ளல் வேண்டும்.
இறைவன் நம்மை எப்போதும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். ஆனால் இறைவனை நாம்தான் (மனிதன்) கண்டுகொள்ள நம்மிடம் மட்டுமே உள்ள சிறப்பாற்றலால் முயன்று வெற்றி பெற வேண்டும். அதற்கு வழி பக்தியோ, நற்கருமமோ, யோகவழியோ, ஞான மார்க்கமோ எதுவாயினும் அவ்வழி நம்மை நிச்சயம் இறைவனிடம் கண்டிப்பாகக் கொண்டு சேர்க்கும் என நம்புவோம் நம்பிக்கை சனாதனத்தின் ஒரு அங்கம்.
ஹிம்சாயாம் துடயதே யஸ்ஸ :
ஹிந்து ரித்ய பி தீயதே - உபநிஷத வாக்கியம்
ஹிம்சை என்பதில் எவன் துன்பம் கொள்கிறானோ அவன் ஹிந்துவாகின்றான்.
எவர்க்கும், எதற்கும், எப்போதும் எதனாலும் தீது செய்யாதிருப்பதே தர்மம் என்று கீதை கூறுகிறது. தர்மங்களே கொள்கையாய், இறைவனே யாவற்றிற்கும் எல்லையாய், வகுக்கப்பட்டதே இந்து மதம்.
ஒன்றே தெய்வமென்றும், குலமதே மனிதம் என்றும் குணங்களைக் கொண்டதொரு இயல்பினதே இந்து என்பதாம்.
கடவுள் அரூபி, உருவமற்றவன் எனவும், உணர்ந்ததே இந்து என்பார். ரூபத்தை உடைய நமக்கு, ரூபமற்றதைக் காணவியலாததாகையால் நமக்கிரங்கியே இறைவன் ரூபங்கொண்டானென்பதே அக்கூற்றின் குணம்.
பனிக்கட்டியும், நீரும் ஒன்றாக வேண்டுமானால் ஒன்று அது இதுவாக வேண்டும். இல்லையேல் இது அதுவாக வேண்டும். இதுவாகிய நமக்காக அதுவாகிய இறைவன் உருவம் கொண்டான்.
அருவனாய் நின்றானை ஆரறிவார் தானே,
உருவனாய்த் தோன்றிலனேல் உற்று
- சிவஞான போதம்
வழிபாடு செய்யக்கட்டுப்பாடு ஏதுமில்லை, ஒவ்வொரு வரது மனோநிலைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப வழிபாடு செய்வதற்குப் பல தெய்வங்களைக் கொண்டிருக்கிறது.
யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி யாங்கே
மாதொருபாகனார் தாம் வருவார்.....
-(சிவஞான சித்தியார்)
இறுதியுரை
புனித பூமியான பாரதத்தின் அடித்தளமே பக்திதான். தொட்டிலில் தொடங்கி சுடுகாடு மட்டும் வளர்ச்சிக்கு ஏற்ற முறையில் அன்பான சேவை, ஆண்டவனின் தேவை, கல்வியின் அருமை, கலைகளின் பெருமை, இல்லற தர்மம், நல்லற விளக்கம், நான்மறை நீதிமுதலான அனைத்தையும் அன்று நாம், ஆலயம் என்ற பல்கலைக்கழகத்தில் பக்தி வழிப்போதனா முறை மூலமாகவே கிடைக்கப்பெற்றோம். அதன் பலனாக பயம்,பக்தி இரண்டும் நமது இரத்தத்தோடு கலந்திருந்தன. கடவுளுக்குப்பயந்தோம். தருமத்திற்குப் பணிந்தோம் வாழ்வின் முழுப்பயனை அடைந்தோம்.
அஞ்ஞான இருள் நீக்கும் ஞானச்சுடர்களாகத் தோன்றிய மஹரிஷிகளையும், மெய்ஞானச் சுடர்களாகத் தோன்றி மஹரிஷிகளையும், மெய்ஞான வாழ்வுக்காக இறைவனை பூஜித்த மேலான பக்தர்களையும், மெய்ஞான யோக ஞான வடிவான எம்பிறவி தோறும் எனைத்தொடர்ந்து எனையாளும் என் இறைவனும் சற்குருவுமான ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷியின் பொற்பாதங்களில் என்றென்றும் வீழ்ந்து கிடக்கவே விரும்பும்,
அடியவன்
(டி.எஸ்.கிருஷ்ணன்)
சற்குரு ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி அருளிய
நவ கோட்பாடுகள்
1.அன்போடு அறம் செய்வது
2.அகத்தில் எப்போதும் பரசிந்தை வைப்பது
3.துன்பம் கண்டவிடத்தில் துயர் தீர்ப்பது
4.திணை அளவேனும் புறங்கூறா பண்பு
5.வைகறையில் கப சுத்தி செய்வது
6.வேளையுடன் கன்னிதனை இச்சிப்பது
7.கொலை, புழை, சூது, புலால் நீக்குவது
8.நீச ஸ்திரி சகவாசம் கொள்ளாதிருப்பது
9.எவ்விடத்தும் பொய் கூறா பண்பு கொள்வது
உ
ஓம் அருள் சித்த குருப்யோ நமஹ ஸ்வார்த்தம் சத்சங்க உறுதி மொழி
1.எம் சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷியன் ஸ்வார்த்தம் சத்சங்க உறுப்பினன் ஆகிய நான்
2.ஸ்ரீ சத்குருவின் ஒன்பது கட்டளைகளை எனது உயிரெனக் கொண்டு என் வாழ்நாள் முழுவதும் அதன் வழி நடப்பேன் என்றும்
3.சத்சங்க கோட்பாடுகளை எந்த மாற்றுக் கருத்தும் இன்றி அப்படியே ஏற்று நடப்பேன் என்றும்
4.மனம், வாக்கு, செயல், மூன்றின் வழியிலும், தர்மத்தை கடைபிடிப்பேன் என்றும்
5.சத்சங்க உறுப்பினர் அனைவரும் அன்பு,பண்பு, நேசம்இ மற்றும் மரியாதைக்குரியவர் என்றும்இஅவர்கள் அனைவரும் எனது ஆன்ம வணக்கத்திற்கு உரியவர்கள் என திண்ணமாக எண்ணுவேன் என்றும்
6.ஏனைய அனைத்து சத்சங்க நன்மார்க்க விதிகளையும், அருளாளர் பெருமக்கள் அனைவருடன்இ காய்தல், உவத்தல் இன்றி கலந்து பழகுவேன் என்றும்
7.உலக உயிர்கள் அனைத்தும் இறைவனின் பிரஜைகளே என்றும், அவ்விறைவனை எம் சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷியின் துணை கொண்டு அவரோடு இணைந்து விடுதலே எனது பிறப்பின் லட்சியம் என்றும், சத்குருவின் வழி நடப்பேன் என்றும் சித்த சுத்தியோடு பிரதிக்ஞை செய்கிறேன்.
ஓம் ஸ்ரீ சத்குரு பதஞ்சலி மா மஹரிஷிக்கு ஜெய்.
ஸ்வார்த்தம் சத்சங்கம்
(மஹரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரம்)
ஸ்வார்த்தம் என்ற சொல்லுக்கு உண்மையான விளக்கம். மனிதன் தனக்குத் தானே நன்மை செய்து கொள்ள வேண்டும் என்பதாகும். மனிதன் ஞானம் என்ற பேரறிவை அடைவதே தனக்குத்தானே செய்து கொள்ளும் பெரும் நன்மையாகும்.
மற்ற உயிர்கள் அடைய முடியாத இறைத் தன்மையை அடையக் கூடியவர்களாக மனிதர்கள் உள்ளனர். அந்த இறைத்தன்மையை அடைய யோகம் வழிகாட்டுகிறது.
அந்த யோக அறிவியலின் தந்தையான சத்குரு ஸ்ரீபதஞ்சலி மஹரிஷி அவர்களின் அருளாசியுடன் குருஜி டி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் மானுடர் உடல்இ மனஇஆன்ம நலம் பேணுவதை இலக்காக கொண்ட இயக்கம் ஸ்வார்த்தம் சத் சங்கம்.
கடந்த 25 ஆண்டுகளாக தென்னகத்தில் ஆலயப்பணிஇ யோகப் பயிற்சி பணி இரண்டையுமே எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் மேற்கொள்ளும் இயக்கமாக ஸ்வார்த்தம் சத்சங்கம் விளங்குகிறது. நேரடியாகவும்இ ஊடகங்கள் மூலமாகவும் ஆன்மீகப் பணியை தொடர்ந்து ஆற்றிக் கொண்டு வருகிறது.
இணையதள முகவரி: www.maharishipathanjali.com
ஸ்வார்த்தம் சத்சங்க முகவரி :
டி.எஸ்.கிருஷ்ணன்
(நிறுவனர்இ ஸ்வார்த்தம் சத்சங்கம் )
பிளாட் எண் 2, சபரி நகர்,
மாடக்குளம் மெயின் ரோடு, பழங்காநத்தம் மேற்கு
மதுரை -625 003
Email: swarthamsathsangam@gmail.com
pathanjaliyogakendhram@gmail.com
தொடர்புக்கு: மு.கமலக்கண்ணன்
9344937539, 9789300607