பதிவு செய்த நாள்
07
மே
2015
12:05
கும்பகோணம், : தமிழுக்கு இலக்கணம் வகுத்து கொடுத்த அகத்தியருக்கு, 16வது ஆண்டாக சுவாமிமலையில் உள்ள அவரது சன்னதிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. திருநெல்வேலி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, தஞ்சாவூர் ஆகிய பகுதியில் வசித்து வரும், 1,500 குடும்பங்கள், அகத்திய மாமுனிவரை குருவாக வணங்கி வருகின்றனர். சைவத்தை மற்றும் ஏற்று கொண்டு, சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்ளும் இவர்கள், உணவு கட்டுப்பாட்டில் அதிக கவனம் எடுத்துக்கொள்கின்றனர். மது, மாமிசத்தை அறவே தொடுவதில்லை என்ற கோட்பாடுகளுடன், அகத்தியரின் பாடல்களை பாடி தினமும் வழிபடுகின்றனர்.நெல்லை பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள், 16 வது ஆண்டாக வழிபட சுவாமிமலைக்கு வந்தனர். நாதஸ்வரம், தவில் வாத்தியங்களுடன், யானை ஊர்வலம் முன்னே செல்ல, 500க்கும் மேற்பட்ட ஆண், பெண்களும் ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்து, அபிஷேக பொருட்களை சீர்வரிசையாக ஊர்வலமாக எடுத்து வந்தனர்.சுவாமிமலையின் நான்கு ராஜவீதிகளிலும் ஊர்வலாக வந்த பின்னர், மலைக்கோயிலுக்கு சென்றனர். அங்கு அகத்தியருக்கு பால், சந்தனம், விபூதி ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், 18 வகையான மலர்கள், வாசனைத் திரவியங்கள், நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்கள், உணவு பண்டங்களை வைத்து பூஜை செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது, தீபாரதனை காட்டப்பட்டது.