திருவள்ளூர் : திருவள்ளூர் வீரராகவ சுவாமி கோவிலில், உற்சவர் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாத அமாவாசை யை ஒட்டி, திருவள்ளூர் வீரராகவ சுவாமி கோவிலில் தெப்ப உற்சவ விழா நடப்பது வழக்கம். அதே போல் இந்தாண்டிற்கான விழா 1ம் தேதி துவங்கியது. அன்றைய தினம், பெருமாள் மற்றும் தாயாருக்கு முத்தங்கி சேவை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அன்றிரவு 7மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவ மூர்த்தி எழுந்திருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக அமாவாசையையொட்டி, அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் கோவில் குளத்தில் குளித்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதற்கென ஏராளமான புரோகிதர்கள் அங்கு இருந்தனர். நேற்று முன்தினம் இரவு, தெப்பம் இரண்டாம் நாள் நிகழ்ச்சியும், மூன்றாம் நாளான நேற்று, நீராழி மண்டபத்தில் பெருமாள் திருமஞ்சன நிகழ்ச்சியும் நடந்தது. தெப்பத் திருவிழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளையும், தாயாரையும் வழிபட்டனர்.