பதிவு செய்த நாள்
11
மே
2015
11:05
ஆர்.கே.பேட்டை: அக்னி வசந்த உற்சவத்தில் நேற்று, குருஷேத்திர பதினெட்டாம் நாள் போர் நடந்தது. இதில், துரியோதனனை, பீமசேனன் வீழ்த்தினான். இன்று, தர்மராஜாவுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
ஆர்.கே.பேட்டை அடுத்த, ராஜாநகரம் கிழக்கு கிராம திரவுபதியம்மன் கோவிலில், அக்னி வசந்த உற்சவம், கடந்த மாதம் 30ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி மகாபாரத சொற்பொழிவு, தெருக்கூத்து நடத்தப்பட்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமை மாலை, அர்ச்சுனன் தபசு நடந்தது. காலை, மாலையில் உற்சவ மூர்த்திகள் வீதியுலா வந்து எழுந்தருளினர். நேற்று காலை, பதினெட்டாம் நாள் போர்கள நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. துரியோதன், பீமன், திரவுபதி, காந்தாரி வேடம் அணிந்த தெருக்கூத்து கலைஞர்கள், குருஷேத்திர போர்க்கள நிகழ்ச்சியை நடத்தினர்.
இதில், துரியோதனனை, பீமசேனன் வீழ்த்தினான். துரியோதனன் குருதியை திரவுபதி கூந்தலில் தடவி, தனது சபதத்தை நிறைவேற்றினாள். மாலையில், காப்பு கட்டி விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்கள், கோவில் வளாகத்தின் முன்பாக எழுப்பப்பட்ட அக்னி குண்டத்தில் இறங்கி, தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இன்று காலை, தர்மராஜாவுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.