பதிவு செய்த நாள்
18
மே
2015
02:05
வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் நேற்று திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையிலிருந்து கீழே இறங்க முடியாமல் தவித்தனர். இதில் சிக்கி இருவர் பலியாயினர். வெள்ளம் இழுத்துச் சென்றதில் 8 பேரை காணவில்லை. இரவு முழுவதும் அவர்களை தேடும் பணியில் தீயணைப்பு படையினரும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். சதுரகிரி மலையில் நேற்று அமாவாசை வழிபாடு விமரிசையாக நடந்தது. இதை காண வழக்கம்போல் தமிழகம் முழுவதுமிருந்தும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்தனர்.
அதிகாலை முதல் மலையேறத்துவங்கினர். இந்நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. மலையில் உள்ள ஆறுகள், ஓடைகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அவை அணைத்தும் ஒன்று சேர்ந்து அடிவாரமான தாணிப்பாறையில் அருவியாக விழுந்தது. இதில் வத்திராயிருப்பு கீழத்தெருவை சேர்ந்த இளைஞர்கள் பொன்ராஜ், பாஸ்கர், மனோஜ், மதன் உட்பட 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களை காட்டாற்று வெள்ளம் இழுத்துச் சென்றது. பலர் அங்கிருந்த மரக்கிளையை பற்றியபடி தப்பினர். பொன்ராஜ்,18, உயிரிழந்து ஒரு மரக்கிளையில் சிக்கினார். பாஸ்கர் உட்பட சிலரை காணவில்லை. மற்றொரு ஓடையில் சிக்கி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்தார். மலைப்பாதையில் பல இடங்களில் குறுக்கிடும் ஓடைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் மதியத்திற்கு பிறகு அந்த இடங்களை பக்தர்கள் கடக்கமுடியவில்லை. இதனால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையிலேயே சிக்கி தவித்தனர்.
மந்தித்தோப்பு என்ற இடத்தில் ரோட்டின் குறுக்கே தரைப்பாலத்தில் வெள்ளம் சென்றதால் மீட்பு பணிக்கு சென்ற தீயணைப்பு வாகனங்கள் அந்த இடத்தை கடக்கமுடியாமல் தவித்தன. அரைமணி நேரத்திற்கும் மேலாக அங்கேயே நின்றன. வெள்ளம் குறைந்த பிறகே அந்த இடத்தை கடந்து சென்றன. வத்திராயிருப்பு, ஸ்ரீவி., விருதுநகர் உட்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் தீயணைப்பு படையினர் மலைக்குச் சென்று கயிறு கட்டி பக்தர்களை மீட்டனர். கோரக்குண்டா என்ற இடத்தில் பெரிய பாறை உருண்டு விழுந்து மலைப்பாதை அடைபட்டது. இதனால் பக்தர்கள் செங்குத்தான மலைப்பாறையின்மீது ஏறி அந்த இடத்தை கடந்தனர். சங்கிலிப்பாறை என்ற இடத்தில் ஆற்றை கடக்க முயன்று மேலும் சில பக்தர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர், போலீசார் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்ட கலக்டர் ராஜாராம், எஸ்.பி.மகேஸ்வரன், டி.ஆர்.ஓ. முனுசாமி, சிவகாசி உதவி ஆட்சியர் அமர்குஷ்வாஹா, மதுரை எஸ்.பி., பொன்னுப்பாண்டியன் எம்.எல்.ஏ.,உட்பட பலர் அங்கு முகாமிட்டு மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காணாமல் போனவர்களை இரவு முழுவதும் தேடும் பணி நடந்து வருகிறது. உடன் வந்தவர்கள் காணாமல் போனதால் ஏராளமான வெளியூர் பக்தர்கள் பதறியபடி அடிவாரத்திலேயே உள்ளனர்.