பதிவு செய்த நாள்
19
மே
2015
11:05
பெரம்பலூர்: தழுதாழை கிராமத்தில் உள்ள மாரியம்மன் மற்றும் இளங்காளியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. கடந்த, 10ம் தேதி, கோவில் திருவிழா, கங்கையம்மனுக்கு குடி அழைத்தல், மாவிளக்கு பூஜையுடன் தொடங்கியது. 12ம் தேதி இரவு மாரியம்மனுக்கும், 15ம் தேதி இளங்காளியம்மனுக்கும் பூச்சொரிதல் விழா நடந்தது. தொடர்ந்து, பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும், குடி அழைத்தல், பொங்கல், மாவிளக்கு பூஜை மற்றும் அம்மன் திருவீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. தழுதாழை கிராமத்தின் பிரதான வீதிகள் வழியே இழுத்து செல்லப்பட்ட தேர், மாலையில் நிலைக்கு வந்தது. தழுதாழை, அரும்பாவூர், வெங்கலம், பெரியம்மாபாளையம், கிருஷ்ணாபுரம், மேட்டூர், வெங்கனூர், பூலாம்பாடி, மலையாளப்பட்டி, வேப்பந்தட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.