குளித்தலை: குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில் புதுப்பிக்கப்பட்ட தேருக்கு, நிரந்தரமாக மேற்கூரை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடம்பவனேஸ்வரர் கோவில் காவிரியின் தென்கரையில் சிவன் வடக்கு திசையை நோக்கி அமைந்துள்ளது. குளித்தலை கடம்பவனேஸ்வரரை வணங்கினால், காசிக்கு சென்று வழிபடுவதை நிகராக கருதுகின்றனர். தேர் பழுதடைந்ததால், கடந்த, 11 ஆண்டாக தேரோட்டம் நடக்காமல் இருந்தது. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கையால் இந்து சமய அறநிலையத்துறை மூலம், 25 லட்ச ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கி தேர் செய்து, கடந்த மாதம் மாசி மாதம் வெள்ளோட்டம் நடந்தது. தேரோட்டத்துக்கு பின், புதுப்பிக்கப்பட்ட தேர், வெயிலிலும் மழையிலும் நனைந்து தேர் சிற்பங்கள் சிதையும் நிலை காணப்பட்டது. இது குறித்து, காலைக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறையினர் நிரந்தரமாக மேல்கூரை அமைக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.