பரமசிவனின் அஷ்ட மூர்த்திகளில் ஜலமூர்த்தியாக உள்ள பவர் என்னும் அம்சத்தின் தேவியாகப் போற்றப்படுபவள் அன்னை பவானி. மனித வாழ்விற்கு ஆதாரமாகத் திகழும் ஆற்றல்களுள் நீரும் ஒன்று. அந்த நீருக்கு தண்மையை (குளிர்ச்சி) அளித்து தண்ணீர் என பெயர் பெறச் செய்தவள் இவள். அம்மை போன்ற உயிரைப் பறிக்கும் கொள்ளை நோய்களிலிருந்து மக்களைக் காத்தருள்பவளாக, பெரிய பாளையத்தம்மன் என்ற பெயரில் சென்னை அருகில் வீற்றிருக்கிறாள். இக்கோயிலில் வழிபாடு செய்ய பக்தர்கள் வேப்ப இலை ஆடை அணிந்தபடி வருகின்றனர்.