பதிவு செய்த நாள்
26
மே
2015
12:05
ராசிபுரம்: நாமக்கல் அடுத்த, குருக்கபுரம் அழகாபுரத்தில், செல்வமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், வடகிழக்கில் போதமலையும் (கொல்லிமலை), தென் கிழக்கில், நைனாமலையும் (வைணவ திருப்பதி), தென்மேற்கில், திருச்செங்கோட்டு மலையும் (செங்கோட்டுவேலவர்-அர்த்தநாரீஸ்வரர்), வடமேற்கில் சித்தர்கள் வாழ்ந்து கொண்டுள்ள அளவாய் மலையும் (சித்தர்மலை), மேற்கே, வைகை பொன்மலை, இத்தனை மலைச்சாரல்களின் நடுவில் அமைந்துள்ளது. இங்கு, ஆதிவிநாயகர், ராஜகணபதி, ராஜமுருகன் மற்றும் நவக்கிரகங்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். கோவில் திருப்பணி மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், மே, 29ம் தேதி கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. மே, 28ம் தேதி காலை, 7.45 மணிக்கு மங்கள இசையுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. தொடர்ந்து விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், கிரக தோஷம் நீக்கும் நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.பகல், 3 மணிக்கு, குருசாமிபாளையம் சிவசுப்ரமணியம் கோவிலில் இருந்து, தீர்த்தக்குடம், சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், மாலை, 5.30 மணிக்கு, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், திருக்கலசங்கள் யாகசாலை பிரவேசம், முதல்காலம் ஆரம்பம் நடக்கிறது. அன்று, இரவு, 9 மணிக்கு, கோபுர விமான கலசம் வைத்தல், ஆதி விநாயகர், ராஜகணபதி, ராஜமுருகன், செல்வமுத்து மாரியம்மனுக்கு அஷ்டபந்து மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. மே, 29ம் தேதி அதிகாலை, 5.30 மணிக்கு நவக்கிரக ஹோமம், காலை, 6 மணிக்கு, இரண்டாம் கால பூஜை நடக்கிறது. காலை, 7 மணிக்கு விமான கோபுரம், கும்பாபிஷேகம், ஆதி விநாயகர், ராஜகணபதி, செல்வமுத்து மாரியம்மன், ராஜமுருகன் ஆகிய ஸ்வாமிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, மகா அபிஷேகம், ஸ்வாமி தரிசனம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.