தியாகதுருகம்: பீளமேடு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. தியாகதுருகம் அடுத்த பீளமேடு கிராமத்தில் உள்ள நூற்றாண்டு பழமையான மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 20ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சக்தி கரகம் அலங்கரிக்கப்பட்டு திருவீதியுலா நடந்தது. கோவில் வளாகத்தில் மாரியம்மன் சரித்திர பாரத பாடல் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. நேற்று முன்தினம் சாகை வார்த்தல் மற்றும் ஊரணி பொங்கல் விழா நடந்தது. மோடி எடுத்தல், காத்தவராயன், ஆரியமாலா திருக்கல்யாண வைபவம், கழுமரம் ஏறுதல் உள்ளிட்ட உற்சவம் நடந்தது. அதைத்தொடர்ந்து மாரியம்மன் உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்டு தேரில் வைத்து பக்தர்கள் கூடி வடம் பிடித்து ஊர்வலமாக இழுத்து சென்றனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.