பதிவு செய்த நாள்
02
ஜூன்
2015
12:06
திருப்பூர்: பக்தர்களின் ஓம் நமச்சிவாய கோஷங்களுக்கு மத்தியில், திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில் தேரோட்டம், நேற்று கோலாகலமாக நடைபெற்றது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா, 26ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி, வீதி உலா சென்றார். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் நடந்தன. 6:00 மணிக்கு, தேரில் எழுந்தருளினர். மாலை, 4:04 மணிக்கு, விஸ்வேஸ்வரர் தேரோட்டம் துவங்கியது; நமச்சிவாய கோஷங்களுக்கு மத்தியில், தேரை பக்தர்கள் வடம் பிடித்து, இழுத்தனர். விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரர், மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டம், அர்த்தஜாம பூஜை சிவனடியார் திருக்கூட்டம் மற்றும் திருப்பூர், கரூர், கோவை, வெண்ணத்துõர், பவானி, மேட்டுப்பாளையம், புதுச்சேரி, முதுகுன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சிவனடியார்கள், கைலாய வாத்தியங்கள் இசைத்தனர். பெண்களின் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் நடந்தது.
திருஞானசம்மந்தர், அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், மாணிக்க வாசகர் வேடமணிந்து, குழந்தைகள் சென்றனர். மாலை, 6:15 மணிக்கு, அரிசிக்கடை வீதி - காமராஜர் ரோடு சந்திப்பு பகுதிக்கு தேர் வந்தது. காமராஜர் ரோடு வழியாக, பூ மார்க்கெட் சந்திப்பை சென்றடைவதற்குள், இருள்சூழ்ந்தது. தேர் உரசி விடக்கூடாது என்பதற்காக, பூ மார்க்கெட் பகுதியில் மின்தடை செய்யப்பட்டிருந்தது. விளக்கு வசதிக்கு, கோவில் நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்யாததால், தேர் கிழக்கு நோக்கி திரும்புவதற்கு ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. அதன்பின், மினி ஆட்டோவில் உள்ள சோடியம் விளக்கு செட் கொண்டுவரப்பட்டது. இரவு, 7:35க்கு தேர் கிழக்கு நோக்கி திரும்பியது. இருட்டாக இருந்ததால், தேரை திருப்புதில் சிக்கல் ஏற்பட்டது. ஈஸ்வரன் கோவில் வீதியின் மையமாக திரும்பாமல், வடக்கே உள்ள பூமார்க்கெட் கடைகளை உரசியபடி நின்றது. அப்பகுதியை கடந்தபோது, பூ மார்க்கெட் மின்கம்பத்தில் இருந்த தெருவிளக்கில் தேர் உரசியது. மின்தடை செய்யப்பட்டிருந்ததால், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இரவு, 8:00 மணிக்கு, நிலைக்கு தேர் வந்தடைந்தது ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம், இன்று மாலை, 2:30 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னறிவிப்பின்றி போக்குவரத்து தடை தேரோட்டத்துக்காக, நேற்று பிற்பகல், 1:00 மணியில் இருந்தே, ஈஸ்வரன் கோவில் வீதி, பெருமாள் கோவில் வீதி, அரிசி கடை வீதி, பெரிய கடை வீதி, கே.எஸ்.சி., பள்ளி வீதி உள்ளிட்டவற்றில், வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் காவல் இளைஞர் படை உள்ளிட்ட குழுவினர், ஆங்காங்கே குறுக்கு வீதிகளில், பேரி கார்டு வைத்து, போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினர். முன்னறிவிப்பின்றி மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். மேலும், கடைகளுக்கு முன் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து, டெம்போ மற்றும் சரக்கு ஆட்டோக்களில் ஏற்றிச் சென்றனர். கடைக்குச் சென்று வந்தோர், திரும்பி வந்து பார்த்து, வாகனம் இல்லாமல் அதிர்ச்சி அடைந்தனர்.