பதிவு செய்த நாள்
02
ஜூன்
2015
12:06
கோபி: கோபி, கரட்டடிபாளையம், பங்களாப்புதூர் ரோட்டில், மாசானியம்மன் நகரில் வயல் வெளியில் நடுவே, பல லட்சம் செலவில் ஸ்ரீஷீரடி சாய் அன்னதான பாபா கோவில் கட்டி முடிக்கப்பட்டது. இக்கோவில் வளாகத்துக்குள் விநாயகர், தத்தாத்ரேய ஸ்வாமிக்கு தனி கோவில்கள் எழுப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகத்துக்காக, கோவில் முன் பிரமாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டது. கடந்த, 29ம் தேதி மஹா கணபதி ஹோமத்துடன், யாக பூஜை துவங்கியது. மஹா சுதர்ஸன ஹோமம், குபேர லட்சுமி ஹோமம் போன்றவையுடன், கோபுர கலசம் வைத்தல் நடந்தது. நேற்று முன்தினம் நான்காம் கால யாக பூஜையும் நாடிசந்தனம், மூலமந்திரம், காயத்ரி ஹோமங்கள் நடந்தது. கரூர் முரளி சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், கும்ப கலசங்களுக்கு ஊற்றப்பட்டு, ஸ்ரீஷீரடி சாய் அன்னதான பாபாவுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அங்கு கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது, புனித நீர் தெளிக்கப்பட்டது. மகா தீபாரதனைக்கு பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீஷீரடி சாய் அன்னதான பாபா கோவில் டிரஸ்ட் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.