பதிவு செய்த நாள்
02
ஜூன்
2015
12:06
துறையூர்: திருச்சி மாவட்டம், துறையூர் பெருமாள்மலையில், தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. வைகாசி விசாக நட்சத்திரத்தன்று பெருமாள்மலை மீதுள்ள தேவி, பூதேவி, சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி ஸ்வாமி திருத்தேர் எழுந்தருளி, கிரிவலப்பாதையில் உலா வந்து, பக்தர்களுக்கு அருளினார். கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் பிரமோற்சவ விழாவில், வைகாசி விசாகத்தன்று பெருமாள்மலை ஸ்வாமிக்கு தேரோட்டம் நடைபெறுவது வேறு எந்த வைணவ தலத்திலும் இல்லாத சிறப்பு. தேர் திருவிழாவுக்காக கடந்த, 24ம் தேதி கொடியேற்றம் நடந்தது. ஒவ்வொரு நாளும் காலையில் பல்லக்கிலும், இரவில் வெவ்வேறு வாகனத்திலும் ஸ்வாமி வீதியுலா நடந்தது. 7ம் நாளில் ஸ்வாமிக்கு திருக்கல்யாணம் அடிவாரத்திலுள்ள கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நடந்தது. 9ம் நாளான நேற்று காலை, 9 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், திருச்சி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ராஜாத்தி, கோவில் முன்னாள் அறங்காவலர்கள் விஜயராகவன், அரங்கராஜன், நகராட்சி தலைவர் முரளி, ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் சேனை செல்வம், கவுன்சிலர் ஸ்ரீதர் உள்பட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தமிழகம், கர்நாடகம், ஆந்திர மாநிலத்திலுள்ள பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். இன்று காலை தீர்த்தவாரி, இரவு சப்தாவரணம் நிகழ்ச்சி நடைபெறும். வரும், 3ம் தேதி காலை திருமஞ்சனம், இரவு ஆளும் பல்லக்கில் ஸ்வாமி வீதியுலா வந்து, திருவிழா நிறைவு பெறும்.