பதிவு செய்த நாள்
06
ஜூன்
2015
11:06
அவலூர்பேட்டை: கெங்கபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம் நடந்தது.
மேல்மலையனூர் ஒன்றியம், கெங்கபுரம் கிராமத்திலுள்ள பழமையான வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா, கடந்த 29ம் தேதி துவங்கியது. தொடர்ந்து தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், காலை மற்றும் இரவில் சுவாமி வீதியுலா நடந்தது.
கடந்த 1ம் தேதி காலை கருட சேவையும், கோபுரதரிசனமும், இரவு கருட வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், 3ம் தேதி இரவு சுவாமி திருக்கல்யாண வைபவமும் நடந்தன. நேற்று காலை 10:00 மணிக்கு திருத்தேர், தேரடியிலிருந்து வடம் பிடித்து மாட வீதி வழியாக ஊர்வலம் நடந்தது. பொதுமக்கள் சில்லரை காசுகளையும், விளை பொருட்களையும் தேர் மீது வீசினர். சிறப்பு அலங்காரத்தில் பூதேவி, சீதேவி சமேத வரதராஜ பெருமாள், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் பிரகாஷ், ஆய்வாளர் கோவிந்தராஜ், ஊராட்சி தலைவர் தமிழரசி தமிழ்வாணன், துணைதலைவர்ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வளத்தி இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.