பதிவு செய்த நாள்
08
ஜூன்
2015
02:06
செஞ்சி : சிங்கவரத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள, ரங்கநாதர் கோவில் தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.
செஞ்சி தாலுகா சிங்கவரம் மலை மீது வரலாற்று புகழ் பெற்ற பழமையான பல்லவர் கால ரங்கநாதர் குடைவரைக் கோவில் உள்ளது. இக்கோவில் தேர் கடந்த 80 ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்தது. இதனால் பல ஆண்டுகள் தேர் திருவிழா தடைபட்டது. சில ஆண்டுகள் தற்காலிக தேர் அமைத்து விழா நடத்தினர். இந்த கோவிலுக்கு, இந்து சமய அறநிலையத்துறை மூலம் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், கிராம நிதியாக 8 லட்சம் ரூபாயும் மற்றும் பக்தர்களிடம் நன்கொடை பெற்று, 60 லட்சம் ரூபாய் மதிப்பில் 41 அடி உயரத்தில், புதிதாக தேர் தயார் செய்யப்பட்டது.இந்த தேரின் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. காலையில் ரங்கநாதர் கோவிலில் தேர் கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். ஹோமத்தில் வைக்கப்பட்ட கும்பத்தை தேரில் ஏற்றி, 9:00 மணிக்கு வடம் பிடித்தனர். மாட வீதிகள் வழியாக தேர் பவனி நடந்தது.இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், செஞ்சி பேரூராட்சி சேர்மன் மஸ்தான், முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன், முன்னாள் சேர்மன் ரங்கநாதன், அன்னை பவதாரணி, ஊராட்சி தலைவர் ரங்கநாதன், தேர் திருப்பணிக்குழு உறுப்பினர்கள் குணசேகர், ஏழுமலை, இளங்கீர்த்தி, சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.