சிவன் கோயில் தொட்டியில் இல்லை குடிநீர் சிவகாசியில் பக்தர்கள் தவிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2015 02:06
சிவகாசி:சிவகாசி சிவன் கோயில் தண்ணீர் தொட்டியில் குடிக்க நீரின்றி இருப்பதால் பக்தர்கள் அவதியடைந்தனர். பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்றான இக் கோயிலில் சமீபகாலமாக பிரச்னைக்கு பஞ்சமில்லை. இதை தடுக்க இந்து அறநிலைத்துறையினர் முயற்சி எடுத்தும் பயனில்லை. இங்கு சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி சூரியபகவான் சிலை அருகில் வைக்கப்பட்டு உள்ளது. ஆயிரம் லிட்டர் கொண்ட இத் தொட்டியில் குடிநீர் லாரி மூலமாக வினியோகம் செய்யப்படுகிறது.
மாதக்கணக்கில் நீர் நிரப்பாததால் பிரசாதம், அன்னதானம் சாப்பிடும் பக்தர்களுக்கு குடிக்க நீரின்றி போனது. குழந்தைகள், முதியோர்கள் நீரின்றி தவித்து அவதியுடன் செல்லும் நிலை காணமுடிகிறது. கோயிலில் 2 நகராட்சி குடிநீர் சப்ளை பைப்புகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் இருந்தும் கூட பைப் அமைத்து இத் தொட்டியில் தண்ணீர் விடலாம். அதை செய்யவும் கோயில் ஊழியர்கள் மறுப்பதற்கு காரணம் தெரியவில்லை. தவித்த வாய்க்கு தண்ணீர் கொடு என்ற பழமொழியை கருத்தில் கொண்டு அறநிலைத்துறை அதிகாரிகள் குடிநீருக்கு வழி செய்ய வேண்டும் என்பதே பக்தர்களின் வேண்டுகோளாக உள்ளது.