சூலுார்: அத்தனுார் அம்மன் கோவில், 23வது ஆண்டு வைகாசி திருவிழா நேற்று நடந்தது. சூலுார் மார்க்கெட் ரோட்டில் உள்ள அத்தனுார் அம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இங்கு 23ம் ஆண்டு வைகாசி திருவிழா, மே 26ல் சுவாமி சாட்டுதலுடன் துவங்கியது. 2ம்தேதி அக்னி கம்பம் நடுதலும், 9ம்தேதி பண்டார வேஷம், அம்மை அழைத்தலும் நடந்தது. நேற்று காலை 9:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா, சிவன் கோவிலில் இருந்து துவங்கியது. ஏராளமான பெண்கள் பால் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். பகல் 12:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. வள்ளி கும்மிபாட்டு நடந்தது. இன்று மாலை 6:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு, திருவீதி உலா நடக்கிறது. தொடர்ந்து ஊர் அபிஷேக பூஜை மற்றும் மகா முனி பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.