குரு பகவான் ராசிக்கு 4-ம் இடத்தில் இருந்து சிரமங்களைத் தந்திருப்பார். குடும்பத்தில் பல பிரச்னைகளை உருவாக்கி இருப்பார். உறவினர்களிடையே விரோதம் வந்திருக்கும். கணவன்-மனைவி இடையே பிணக்கு ஏற்பட்டு இருக்கும். இப்போது குரு பகவான் ராசிக்கு 5-ம் இடத்துக்கு வருவதால் நன்மை நாளுக்கு நாள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். பொருளாதார வளம் கூடும். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 2015 டிச.20ல் குரு சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு செல்கிறார்.
இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால் அவரது 9-ம் இடத்துப்பார்வை சாதகமாக அமையும். சனிபகவான் 2015 ஜூன் 12ல் வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். அதாவது பின்னோக்கி நகர ஆரம்பிக்கிறார். பொதுவாக இந்த இடத்தில் இருக்கும் போது சனி குடும்பத்தில் பல்வேறு பிரச்னையை உருவாக்குவார். அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் வாசம் நிகழும். இது சனியின் பொதுவான பலன்கள். ஆனால் வக்ரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சனிபகவான் வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலன்களை தரமாட்டார். மேற்கண்ட கிரக நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம். நல்ல பணவரவு இருந்து கொண்டே இருக்கும். எந்த தடைகள் வந்தாலும் முறியடித்து வெற்றி காண்பீர்கள். சமூகத்தில் அந்தஸ்து சிறப்பாக இருக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். சிலர் சற்று முயற்சி செய்தால் வீடு, மனை வாங்கலாம். இதற்காக கடன் வாங்க நேரிடும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வீட்டுக்கு தேவையான சகல வசதியும் கிடைக்கும். தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு குடிபோக வாய்ப்புண்டாகும். திருமணம் போன்ற சுப விஷயப் பேச்சில் நல்ல முடிவு கிடைக்கும். புது மணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர் மத்தியில் நற்பெயர் உண்டாகும்.
பணி சிறப்படையும். வேலைப்பளு பெருமளவில் குறையும். விருப்பமான இட, பணி மாற்றத்தைப் பெறலாம். உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை தடையின்றி கிடைக்கும்.
வியாபாரத்தில் லாபத்துக்கு குறை இருக்காது. வருமானம் அதிகரிக்கும். ஆனால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக நடந்து அவர்கள் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளவும். புதிய வியாபாரம் தற்போது தொடங்க வேண்டாம். அப்படியே தொடங்கினாலும் உங்கள் அறிவை பயன்படுத்தி முதல் போடாமல் முன்னேற வழிவகை காணுங்கள். அதுவும் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் பெயரில் தொடங்கவும். அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்கும்.
மாணவர்கள் முன்னேற்ற பலனைக் காணலாம். கடந்த கல்வி ஆண்டைவிட கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்கப்பெறலாம். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். ஆசிரியர்களின் அறிவுரை பயன்தரும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பண வரவு குறையாது.
விவசாயத்தில் வளர்ச்சி காணலாம். கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியதுஇருக்கும். நெல், கோதுமை, கேழ்வரகு, சோளம் மற்றும் மானாவாரி பயிர்கள் நல்ல வருமானத்தை தரும். அதிக செலவு பிடிக்கும் பயிரை தவிர்க்கவும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ஆனால் புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.
பெண்கள் குதூகலமான பலனைக் காண்பர். கணவரின் அன்பு கிடைக்கும். உங்கள் மூலம் குடும்பம் சிறக்கும். சிலருக்கு பிறந்த வீட்டில் இருந்து பொன், பொருள் வரலாம். பிள்ளை வளர்ப்பில் பெருமை அடைவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனிபகவானை வணங்கலாம். பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உணவு சாப்பிடுங்கள். ஞானிகளை சந்தித்து காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள்.
மேலும்
குரு பெயர்ச்சி பலன்கள் (11.5.2025 முதல் 26.5.2026 வரை) »