பதிவு செய்த நாள்
20
ஜூன்
2015
12:06
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, ஆலடிக்கருப்பூரில், 9ம் நூற்றாண்டை
சேர்ந்த அய்யனார் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.திருவாரூர் மாவட்டம், குடவாசல்
தாலுகாவிற்கு உட்பட்ட மணப்பறவை, அடவங்குடி, மேலபாலையூர், விடயல்கருப்பூர், ஆலடி
கருப்பூர் உட்பட, 10க்கும் மேற்ப்பட்ட ஊர்களில் தொல்லியல் வல்லுநர் குடவாயில் சுந்தரவேலு மற்றும் தொல்லியல் ஆர்வலர் பஷீர் அகமது ஆகியோர் கடந்த, இரண்டு தினங்களுக்கு முன் களஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆலடிக்கருப்பூரில், 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய, 9ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிலை ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து தொல்லியல் வல்லுநர் சுந்தரவேலு கூறியதாவது;இந்த அய்யனார் சிலை, 9ம்
நுற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இந்த சிலையானது பேரெழில் மிக்க அற்புதப்படைப்பாக
உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் சிகை அலங்காரம் ஜடாபாரம் போல், வேறு எந்த ஐயனாரிலும் காண இயலாது. தேர்வடம் போல், இருபெரும் உருட்டல்கள் ஒன்றின் மீது ஒன்று அமைக்கப்பட்டுள்ளன.
படிக மணிகள் கோர்த்துள்ளதை போல், முடிச்சுருள்களின் செதுக்கு வேலைப்பாடுடன் உள்ளது.வலது காதினில் பனை ஓலைச்சுருள் சொருகப்பட்டுள்ளது. இடது காது
வெறும் நீள் துளையுடன் ஆபரணம் ஏதுமின்றி உள்ளது. கழுத்தில், பெரிய சதுரக் கற்கள் பதித்த நெக்லஸ் (காரை) மேற்கையில் வளையும் கீழ்க் கையை இரு கம்பி வளையல்களும்
அணிவிக்கப்பட்டுள்ளன. இடையில், அலை மடிப்புகளுடன் கூடிய ஆடை விளங்குகிறது.வலது கையில் சிறு மலர் தரித்துள்ளது. இடது கை தண்ட அஸ்தமாக நீட்டப்பட்டுள்ளது. இந்த சிலையின் உயரம், 112 செ.மீ., உள்ளது. இதன் காலம், 9ம் நூற்றாண்டாக இருக்கலாம், என்று கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.